Rajinikanth About Tirupati Laddu : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வேட்டையன் திரைப்படம் குறித்தும், திருப்பதி லட்டு விவகாரம் பற்றியும் ரஜினிகாந்த் பேசியது வைரலாகி வருகிறது. ரஜினியின் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகிறது.
தசெ ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார், மனசிலாயோ பாடலுக்கு அனிருத்துடன் டான்ஸ் ஆடி வைப் கொடுத்திருந் அவர், தனது வழக்கமான ஸ்டைலில் குட்டி ஸ்டோரியும் கூறியிருந்தார். வேட்டையன் படத்தில் ரஜினி போலீஸ் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்துள்ளார். இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த ரஜினியிடம் வேட்டையன் படம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வேட்டையன் படம் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என எதிர்பார்ப்பு இருக்கு, தர்பார் படத்தை விடவும் இது வித்தியாசமாக இருக்கும் என்றார். அதனைத் தொடர்ந்து ரஜினியிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், “ஆன்மிகவாதியான நீங்கள் திருப்பதி லட்டு விவாகரம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்” என கேட்டனர். அதற்கு பதில் சொல்ல விரும்பாத ரஜினி, “நோ கமெண்ட்ஸ்” என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையானது.
இந்த விவகாரம் ஆந்திரா மட்டுமின்றி இந்தியளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் மெய்யழகன் பட ப்ரோமோஷனுக்காக ஐதராபாத் சென்றிருந்த நடிகர் கார்த்தியிடம், திருப்பதி லட்டு குறித்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு கார்த்தி ஜாலியாக சிரித்தபடியே ‘நோ கமெண்ட்ஸ்’ என பதில் கூறியிருந்தார். இதற்கு ஆந்திர துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கார்த்தி உடனடியாக மன்னிப்புக் கேட்டு ட்வீட் போட, பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது.
இதனால் உஷாரான சூப்பர் ஸ்டார் ரஜினி(Super Star Rajinikanth), திருப்பதி லட்டு(Tirupati Laddu) பற்றிய கேள்விக்கு பதிலே சொல்லாமல் கிரேட் எஸ்கேப் ஆகிவிட்டார். சில தினங்களுக்கு முன்னர் அரசியல் குறித்து கேள்வி கேட்க வேண்டாம் என விரலை நீட்டி வார்னிங் செய்திருந்தார் ரஜினிகாந்த். இப்போது லட்டு குறித்தும் பதில் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சென்னை விமான நிலையத்தில் ரஜினியுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.