கன்னியாகுமரி கண்ணாடி பாலம்.. முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சர்வதேச சுற்றுலா தளமான கன்னியாகுமரிக்கு வார விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருகை தரும் பயணிகள் கடற்கரையில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
பெரும்பாலும் சுற்றுலா பயணிகள், சூரிய உதயம், அஸ்தமனம், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை கண்டு ரசிப்பதற்காகவே கன்னியாகுமரிக்கு வருகை தருவார்கள். நடுக்கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளூர் சிலைக்கு செல்ல அரசு சார்பில் பூம்புகார் படகு போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், கன்னியாகுமரி கடலில் அடிக்கடி ஏற்படும் கடல் நீர்மட்டம் தாழ்வு, கடல் சீற்ற உள்ளிட்ட காரணங்களால் இந்த படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. இதனால் சுற்றுலா செல்லும் பயணிகள் மிகவும் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
இந்நிலையில், விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் பாலம் அமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதை நிறைவேற்றும் வகையில் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 77 மீட்டர் நீளம் 10 மீட்டர் அகலத்தில் நவீன தொழில்நுட்பத்தில் கண்ணாடி கூண்டு பாலம் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரியில் திருவள்ளூர்வர் சிலை நிறுவி 24 ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழ் நாடு அரசு சார்பில் வெள்ளி விழா நிகழ்ச்சி இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, விவேகானந்தர் பாறை முகப்பு வரை சென்று திரும்பினார். இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் வெள்ளி விழா நிகழ்ச்சியையொட்டி கன்னியாகுமரி முழுவதும் விழா கோலமாக காட்சியளிக்கிறது.
What's Your Reaction?