ஆளுநரை காப்பாற்றும் அதிமுக-பாஜக கள்ளக் கூட்டணி.. திமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

சென்னையில் திமுக சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக-பாஜகவை விமர்சிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

Jan 7, 2025 - 08:37
 0
ஆளுநரை காப்பாற்றும் அதிமுக-பாஜக கள்ளக் கூட்டணி.. திமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
சென்னையில் திமுகவால் ஒட்டப்பட்ட போஸ்டர்

2025-ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (ஜன 6) காலை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அந்த வகையில் பேரவை மண்டபத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். தொடர்ந்து, சட்டப்பேரவை தொடங்கியதும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை முழுமையாக வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி யாரும் எதிர்பாராத விதமாக பேரவையை விட்டு திடீரென வெளியேறினார். அதாவது, பேரவை தொடங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி ஆளுநர் வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆளுநர் வெளிநடப்பு செய்தது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அதில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. 

தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும்  பாடப்படுகிறது.  இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.

ஆளுநர் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான முதலமைச்சரிடமும், சட்டப்பேரவை சபாநாயகரிடமும்  உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு  உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்” என்று ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. 

ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, ஆளுநர் ஜனநாயக கடமையை ஆற்றியிருக்க வேண்டும். உரையை புறக்கணிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இவ்வாறு செயல்படுகிறாரா? என்ற எண்ணம் தோன்றுகிறது. திமுக அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தாலும் சட்டப்பேரவை இப்படித்தான் நடக்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சட்டசபையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதை கண்டித்து சென்னையில் திமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ‘தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநர்; அவரை காப்பாற்றும் அதிமுக-பாஜக கள்ளக் கூட்டணி’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி ஆகியோரை விமர்சிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow