குடியிருப்புகளை அகற்ற டெண்டர்: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்? அரசு விளக்கம்!

குடியிருப்புகளை அகற்ற டெண்டர்: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்? அரசு விளக்கம்!

பட்டினப்பாக்கத்தில் பழுதடைந்த வாடகைக் குடியிருப்புகளை இடிக்க டெண்டர் விட்டது நீதிமன்ற உத்தரவின்படியே தவிர புதிய தலைமைச் செயலகத்திற்காக அல்ல என அரசு விளக்கமளித்துள்ளது.

Author: Christon தமிழ்நாடு

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கு எதிர்ப்புகள் நிலவி வரும் சூழலில், அங்குள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளை இடிப்பதற்கான டெண்டர் கோரப்பட்ட விவகாரத்தில் அரசுத் தரப்பில் முக்கிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமைச் செயலகம்

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நிலவும் இடநெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மெரினா கடற்கரை சாலையின் தெற்கு முனையில் உள்ள பட்டினப்பாக்கம் பகுதியில் 26 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அப்பகுதியில் உள்ள மீனவ கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இத்திட்டத்திற்குத் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

டெண்டர் அறிவிப்பு

இந்நிலையில், பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள பழைய அரசு ஊழியர் குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்துவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளைத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. புதிய தலைமைச் செயலகக் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்காகவே இந்தக் கட்டடங்கள் இடிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

உண்மை நிலவரம் என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்குத் தமிழ்நாடு அரசின் தகவல் நம்பகத்தன்மைப் பிரிவு விளக்கம் அளித்துள்ளது.

அதில், "1988-இல் கட்டப்பட்ட இந்த 96 வாடகைக் குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால், IIT மற்றும் அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் அடங்கிய தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைப்படியே கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே இன்று (நவம்பர் 2) இடிக்கும் பணிக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், பழைய குடியிருப்புகள் இடிக்கப்படுவது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலான வழக்கமான நடவடிக்கை என்றும், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காகப் பலவந்தமாக இடிக்கப்படவில்லை என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.