RATHAVETTAI EPISODE 13 : சென்னையையே ஆட்டிப்படைத்த திண்டுக்கல் பாண்டியின் க்ரைம் ஸ்டோரி !

RATHAVETTAI EPISODE 13 : சென்னையையே ஆட்டிப்படைத்த திண்டுக்கல் பாண்டியின் க்ரைம் ஸ்டோரி !

ரத்தவேட்டை பாகம் 13 : திண்டுக்கல் பாண்டி என்ற பெயரில் தொடங்கி மெட்ராஸ் பாண்டி எனப் பிரபலமான தாதாவின் பின்னணி, ரவுடி சாம்ராஜ்ஜியம், கூட்டாளிகள், அதிர்ச்சிகரமான சம்பவங்கள் மற்றும் அவரது கடைசி அத்தியாயம் என அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்.

Author: Santhosh தமிழ்நாடு

'மெட்ராஸ்ல இருக்குற வரைக்கும்தாம்ல நான் திண்டுக்கல் பாண்டி திண்டுக்கல்லுக்குள்ள காலை வெச்சிட்டேம்னா ஆட்டோமேட்டிக்கா நான் மெட்ராஸ் பாண்டியாயிடுவேம். இதைப் புரிஞ்சு நடந்துக்குங்கடா...' கேட்பவர்கள் இப்படி ஜெர்க் ஆகுமளவுக்கு பஞ்ச் அடிக்கும் திண்டுக்கல் பாண்டியைத்தான் இந்த அத்தியாயத்தில் சந்திக்கிறோம்!

தமிழக தாதாக்களில் வேற லெவல் சம்பவங்களை செய்த ப்ரைம் டெரர் பீஸ்களில் முக்கியமானவர்தான் திண்டுக்கல் பாண்டி. திண்டுக்கல்லுக்கும், சென்னைக்கும் இடையில ஒரு அருவா பாலத்தைக் கட்டி, அல்லு தெறிக்க ரணகள ராஜ்ஜியம் நடத்தியவர். இவரது ஜகதலபிரதாபங்களை நம்மிடம் விவரித்தார். நத்தம் ஏரியாவின் ரிட்டயர்டு ரஷடி கோழி மோகன்.

"அவனோட ஒரிஜினல் பேரு பாண்டி சொந்த ஊரு திண்டுக்கல். இங்கிட்டு பொழைக்க வழியில்லன்னு 1977 வாக்குல அவுக குடும்பமே மெட்ராஸுக்கு போயிட்டாக. அங்கிட்டு கெல்லீஸ்ல ஒரு டீக்கடையை ஆரம்பிச்சான் பாண்டி. ஆனா, குடும்பத்த ஓட்டுறதுக்கு பணம் பத்தல. அடுத்து அமிஞ்சிகரையில ஒரு சூப் கடை போட்டான். வியாபாரம் பிய்ச்சுகிச்சு. குறிப்பா, நம்மள மாதிரி லோக்கல் வஸ்தாதுங்க வந்து சூப் குடிக்க ஆரம்பிச்சானுவ. அதுல முக்கியமான பயதான் காட்டான் சுப்பிரமணி. அவன் பாண்டிக்கு தோஸ்தாயிட்டான். காட்டான் கூட நட்பான பாண்டி, சின்ன சின்னதா அடிதடி. மிரட்டல்னு லைன் மாறுனான். இது அவனை பெத்தவுகளுக்கு பயத்த கொடுத்துடுச்சு.

உடனே பாண்டியைக் கூப்ட்டு லேய் நீ இங்கன கெடந்தா நாசமா போயிடுவ, உன் தம்பி நாகராச கூப்டுகிட்டு நம்ம ஊருக்கே போயி கடையைப் போட்டு பொழச்சுக்கன்னு அனுப்பிட்டாக. திண்டுக்கல்லுக்கு திரும்புன பாண்டி, கோர்ட்டுக்கு பக்கத்துல சூப் கடையை போட்டாம். எங்குட்டு போனாலும் அவனோட கைப்பக்குவத்துக்கு கூட்டம் கட்டி ஏறும்லா. கோர்ட்டுக்கு பக்கத்துல கடை போட்டா வக்கீலு, போலீஸு மட்டுமில்ல ரவுடிப்பயலுவலும் வருவோம்லா. அப்படித்தான் திண்டுக்கல்லுலேயும் ரவுடிக சங்காத்தம் சேர்ந்துச்சு.

திண்டுக்கல்லுல ஏற்கெனவே சண்டித்தனம் பண்ணிட்டிருந்த கரடி மணி, சி.சர்மணி இவனுங்களோட பார்வையில விழ ஆரம்பிச்சான் பாண்டி. இதுக்கு நடுவுல மெட்ராஸ்ல இருந்து காட்டானோட அடிப்பொடிங்களும் அங்கே ஏதாச்சும் கொலைய பண்ணிட்டு இங்கே பாண்டியோட கஸ்டடியில வந்து பதுங்கினானுவ. இது போலீஸுக்கு தெரிஞ்சு விசாரிக்க பாண்டியோட ஏரியா பரபரப்பாச்சு.

முழுசா நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்குன்னு திண்டுக்கல்லேயும் பாண்டி தன்னோட சண்டித்தனத்த பண்ண ஆரம்பிச்சான். இதை கரடி, சிசர் ரெண்டு பேரும் விரும்பல. கொலை, கட்டப் பஞ்சாயத்துன்னு ரெகுலரா அவனுங்க ரெண்டு பேருக்கும் வர்ற ஆர்டர்ல பாதி பாண்டி கைக்கு போக ஆரம்பிச்சுது. தொழில் போட்டி உருவாகி, ரெண்டு தரப்பும் மோத ஆரம்பிச்சானுவ, அதுல ஒரு நாள் ரெண்டு மணியும் சேர்ந்து பாண்டி தம்பி நாகராஜன கதறக்கதற போட்டுட்டானுக. துடிச்சுட்டாம் பாண்டி. 'எந்தம்பிய கொன்னவனுகள கண்டந்துண்டமா வெட்டாம விடமாட்டேம்ல'ன்னு சபதம் போட்டான். ஆனா லேசுபாசுல கை வைக்கிற அளவுக்கு கரடியும், சிசரும் அப்ப இல்ல. அதனால பொறும காத்தான் பாண்டி.

செத்துப்போன நாகராஜோட நண்பன்தான் இதே திண்டுக்கல்லின் மோகன்ராம். அவனும் தன் நண்பன் கொலைக்கு பழியெடுக்க பாண்டி கூட ஜாயின்ட் ஆனான். இவன் சேர்ந்த பிறகு பாண்டியோட கை ரொம்பவே பலமாகிப் போச்சுப்பே. இதனால ஐயப்பன், சிலோன் மோகன், கட்டையன்னு முக்கியமான ரவுடிகளும் வந்து சேர்ந்தானுவ, பெரிய படையோடு திண்டுக்கல் பாண்டி உருவெடுத்தாம் துவக்கத்துல பழக்கத்துக்கு கொலை பண்ணிட்டு கெடந்தாம் பாண்டி. லோக்கல்ல ஏகாம்பரம் கொலை அப்புறம் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி மணிமாறன் கொலை, அப்புறம் திருச்சி வையம்பட்டி ரியல் எஸ்டேட் ஓனர் துரைராஜ்ன்னு வரிசையா சம்பவங்களை பண்ணினான். அடுத்து டீம் வகையா சேர்ந்த பிறகு தன்னோட தம்பி கொலைக்காக பழியெடுக்க பிளான் பண்ணினான் பாண்டி.

கரடி மணி, சிசர் மணி ரெண்டு பேரும் எந்த ஏரியாவுல ஆள் பலம் குறைவா சுத்திட்டு திரிவானுக எங்கே எப்ப வருவானுங்கங்கிறதை பக்காவா நோட்டம் போட்டு ஸ்கெட்ச் போட்டான். அதன்படி திடுதிப்புன்னு இறங்கி போட்டானுங்க.

இதுக்குப் பிறகு மறுபடியும் சென்னையில வேகமா காலூன துவங்கினாம்யா திண்டுக்கல் பாண்டி புதுசா பல பேர் மெட்ராஸ் பாண்டி டீம்ல தானா வந்து இணைஞ்சானுவ, அத்தனை பேரும் தர டிக்கெட்டுகளும், கேடு கெட்ட ரவுடிகளும் பொம்பளைங்கள வெச்சு பிஸ்னஸ் பண்றவனுங்களும்தான். இவனுங்கள கூட்டாளியா போட்டு பல ஏரியாக்கள்ல சம்பவங்களை பண்ணத் துவங்கினாம் பாண்டி. ஆனால், பணத்துக்காக கூலிப்பய மாதிரி பொருளை தூக்குறது மோகன்ராம்க்கு பிடிக்கல. 'நமக்குன்னு ஒரு மரியாத வேண்டும்ணே. கூலிக்கு இப்படி ரத்தம் பார்க்க எனக்கு ஒத்து வர்ல. உங்களுக்கு ஒண்ணுண்ணா சொல்லுங்க வந்து நிப்பேம். ஆனா இப்டி எவனுக்காகவோ காசுக்கு கழுத்தறுக்க எனக்கு பிடிக்கலன்னு சொல்லிட்டு பாண்டிய விட்டு வெலகிட்டாம் மோகன் ராம்.

பாண்டியை போலீஸ் துரத்திட்டே இருந்தது மட்டுமில்ல, பகையாளிங்க பல பேரு பொழுதன்னைக்கும் பொருளோடேயே அவனை நோட்டம் போட்டுட்டு இருந்தாங்க. இதனால தன்னை சுத்தி ஒரு பாதுகாப்பு வெச்சுக்கிட்டாம். யார் கூடவும் நெருங்கிப் பழகமாட்டாம், ஹோட்டல்ல ரூம் போட்டு தங்குறதுக்குகூட பயம். பெரிய தாதாவான பிறவு வாழ்க்கையில பெரும் பகுதிய கார்லதான் கழிச்சாம்.

பாண்டி கோஷ்டியில மெட்ராஸ்ல இருந்த ரவுடிகள்ல சில பேரு மிகப்பெரிய விபசார புரோக்கருங்க. இதுல சில பேர் பெரிய தாதாக்கள், பிசினஸ் மனுஷங்களுக்கு சினிமா துறை லேடீஸை செட் பண்ணி சப்ளை பண்ற வேலை பார்த்தானுவ. இவனுங்க வழியாவே சினிமா துறைக்குள்ளேயும் கட்டப்பஞ்சாயத்து பண்ணத் துவங்கினாம் பாண்டி, அட்வான்ஸ் வாங்கிட்டு நடிச்சு கொடுக்காத ஹீரோக்கள், ஒப்பந்தத்த தாண்டி ஓவர் சம்பளம் கேக்குற ஹீரோக்களையெல்லாம் பாண்டியை வெச்சு மிரட்டினாங்க. சினிமாவுல ஒரு பார்வையில பத்துப் பேரை விழவைக்கிற பெரிய ஸ்டாரெல்லாம் பாண்டியோட மிரட்டலுக்கு பயந்து, பணிஞ்ச கதையும் உண்டு. இதெல்லாம் பாண்டிப்பயலுக்கு 'என்னய யாரும் அசைக்கமுடியாதுலே'ங்கிற தெனாவெட்ட கொடுத்துச்சு. தமிழ் சினிமாக்காரவுக திண்டுக்கல் பாண்டிங்கிற பேரை கேட்டாலே பதறுன காலம் இருந்துச்சு.

பாண்டியோட ஆட்டபாட்டங்களுக்கு வேட்டு வெச்சது ஒரு முக்கியமான கொலைதாம். கேரளாகாரரான சங்கரன் திவாகரன்ங்கிற ஆளு மதுரையில செட்டிலாகிக் கிடந்தாரு. பிசினஸுல நிறைய ஆராய்ச்சி பண்ற இவருக்கு பணம் கொடுத்து உதவுனவன் ராஜாமணிங்கிற ஆளு இந்த சங்கரன், ஒரே மொபைல்ல ரெண்டு சிம் போட்டு பேசுற டெக்னிக்கை கண்டுபிடிச்ச பிறகு பணம் கோடி கோடியா கொட்டுச்சு அவருக்கு அவரோட கண்டுபிடிப்ப ஒரு பெரிய கம்பெனி விலைக்கு கேட்டப்ப தரமுடியாதுன்னு சொல்லிட்டார். ஆனா இந்த ராஜாமணி இதுல ஏதோ திருட்டுத்தனம் பண்ணியிருக்கான். அதை கண்டுபிடிச்ச சங்கரன் கோர்ட்ல கேஸ் போட்டு ஜெயிச்சுட்டார். இதுல கடுப்பான ஒரு டீம் திண்டுக்கல் பாண்டியை வெச்சு அவரை போட்டுத் தள்ள முடிவு பண்ணினாங்க. பெரிய அமௌண்ட்டை வாங்கிட்டு, தன்னோட டீமுக்கு அந்த ஆளை தூக்க ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தான் பாண்டி அவனோட ஆளுங்க வீடு புகுந்து அவரை போட்டுத் தள்ளுனப்ப, வெளியில கார்ல இருந்து அதை கவனிச்சுட்டு கௌம்பியிருக்கான். பல கொலைகள்ல பாண்டியோட ஸ்டைலே இதுதான் முக்கியமான கொலைன்னா மட்டுமே அவன் இறங்கி பண்ணுவான். இல்லேன்னா ஸ்கெட்ச் மட்டும் போட்டுக் கொடுத்துட்டு தள்ளி உட்கார்ந்து கொலையை ரசிப்பாம்.

முக்கியமான மனுஷனான சங்கரன் இப்படி கொல்லப்பட்ட விவகாரத்துல அப்ப இருந்த கவர்மென்ட்டுக்கு நிறைய தலைவலி, திண்டுக்கல் பாண்டி கதையை முடிக்கச் சொல்லி டெல்லில இருந்தெல்லாம் தமிழ்நாடு போலீஸுக்கு பிரஷர். அவனை போலீஸ் தேடித் தேடி வெறுத்துப் போச்சு, காரணம், ரெண்டு நாளைக்கு ஒரு மொபைல்னு மாத்திட்டு தப்புனாம். வீடு, ஹோட்டல்னு எங்கேயும் தங்காமல் கார்லேயே சுத்திட்டு இருந்தாம். ஆனாலும் போலீஸ் விடல பாண்டியோட டீம்ல இருந்த அழகர்ங்கிற ரவுடியை மடக்கி, அவனோட நடமாட்டத்தை மோப்பம் பிடிச்சுது. 2010ம் வருஷம் பிப்ரவரி மாசம் முதல் வாரத்துல நீலாங்கரை பனையூர் ஏரியாவுக்கு அவன் ஒரு பஞ்சாயத்து டீலிங் பேச வர்ற தகவல் கிடைச்சுது. சாதாரண மனுஷங்க போல, துப்பாக்கிய மறைச்சுட்டு போலீஸ் சுத்துச்சு. ரெண்டு நாள் காத்திருந்தும் அவன் சிக்கல. ஆனால் மூணாவது நாள் வந்தாம் பாண்டி சட்டுன்னு சுத்துப் போட்டுச்சு போலீஸ் தன் கையில இருந்த நாட்டு வெடிகுண்டை போலீஸ் சைடுல விசிட்டு, துப்பாக்கியால சுட்டு தப்பிக்கப் பாத்தான். ஆனா போலீஸ் அவனை டப்பு டப்புன்னு சுட்டு காலி பண்ணிடுச்சு. அந்த சமயத்துல அவனுக்கு டிரைவரா இருந்த கூடுவாஞ்சேரி ரவுடி வேலுவையும் சேர்த்தே போட்டுச்சு போலீஸ். டீக்கடை, சூப் கடையோட நிறுத்தியிருந்தா பாண்டிய பத்தி யாருக்கும் தெரிஞ்சிருக்காது. பல பேரை போட்டுத்தள்ளிட்டு ஆட்டமா ஆடிட்டு அடங்கிட்டாம்ப்பே' என்றபடி சுருட்டை இழுத்து முடித்தார்.

(ரத்தம் தெறிக்கும்) - எஸ். ஷக்தி.