தேனி மாவட்டச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தின் தாக்கம் ஓய்வதற்குள்ளாகவே, கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் தமிழகத்தில் மீண்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 26-ஆம் தேதி தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையிலிருந்து 17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியோடினர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்தச் சம்பவம் மாநில அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பின்னர் தீவிரத் தேடுதலுக்குப் பின் தப்பிய அனைவரும் மீண்டும் பிடிக்கப்பட்டனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிறைக் காவலர்கள் 9 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதுடன், சிறைத்துறை டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு கே.சங்கர் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டார். மேலும், இன்று காலை மதுரை சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
தேனி சம்பவத்தின் எதிரொலியாக உயர்மட்ட மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், கோவையில் மீண்டும் ஒரு கைதி தப்பியோடியுள்ளார். வழக்கில் கைதான அன்னூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான ராகவன் என்பவரை, நீதிமன்ற உத்தரவின்படி கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காகக் காவல்துறையினர் அழைத்து வந்தனர்.
கோவை மத்திய சிறை வளாகத்திற்குள் ராகவனை அழைத்து வந்த காவல்துறையினர், அவரைச் சிறையில் அடைப்பதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்தச் சமயத்தில் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட ராகவன், சிறை வளாகத்தில் இருந்து சாமர்த்தியமாகத் தப்பியோடியுள்ளார். ஆவணங்களை முடித்துவிட்டுத் திரும்பியபோதே அவர் தப்பியது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
கைதி தப்பியோடியது தொடர்பாகப் பந்தயசாலை காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், தப்பியோடிய ராகவனைப் பிடிக்கப் பந்தயசாலை காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் கோவை சிறை வளாகத்திலேயே கைதி தப்பியது காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7









