தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட மற்றும் மண்டல வாரியாக நடத்தப்பட்ட 'முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்' நிறைவடைந்துள்ளன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிறைவு விழாவில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் ரொக்கப் பரிசுகளையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார்.
கடந்த அக்டோபர் 15 முதல் 28 வரை சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 45 வகையான விளையாட்டுப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 38,000 வீரர்கள் பங்கேற்றனர். போட்டிகளின் முடிவில், 141 தங்கம் உட்பட 315 பதக்கங்களுடன் சென்னை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்தது. 142 பதக்கங்களுடன் செங்கல்பட்டு இரண்டாம் இடத்தையும், 117 பதக்கங்களுடன் கோவை மூன்றாம் இடத்தையும் பெற்றன.
"ரூ.500 தான் பரிசா?"
பரிசளிப்பு விழாவின் போது, விளையாட்டு வீரர்களுக்கு ரூ.500 மட்டுமே பொறிக்கப்பட்ட காசோலை/அட்டை வழங்கப்பட்டதாகச் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பின. தவெக அரசு விளையாட்டு வீரர்களுக்கு வெறும் 500 ரூபாயைத்தான் பரிசாக வழங்குகிறதா எனப் பலரும் விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.
உண்மை சரிபார்ப்பகம் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு உண்மை சரிபார்ப்புக் குழு ஆய்வு செய்து விளக்கம் அளித்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.500 என்பது போட்டிக்கான பரிசுத் தொகை அல்ல; அது வீரர்களின் மாதாந்திர உதவித்தொகை திட்டம் சார்ந்த அடையாள அட்டை என்று தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, வெறும் ரூ.500 தான் பரிசாக வழங்கப்பட்டது எனப் பரவும் தகவல் தவறானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் தங்கிப் பயிற்சி பெறும் வீரர்களின் தனிப்பட்ட செலவுகளுக்காக இந்த புதிய நிதி உதவி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் கீழ், சிறப்பு நிலை விடுதி வீரர்களுக்கு மாதம் ரூ.500-மும், முதன்மை விளையாட்டு மைய விடுதி வீரர்களுக்கு மாதம் ரூ.1,000-மும் வழங்கப்படும். சுமார் 2,600 வீரர்கள் பயனடையும் இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ₹1.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
LIVE 24 X 7










