மாற்றுத்திறனாளிகளை அவமதித்த வழக்கு - ஒருவழியாக ஜாமின் பெற்ற மகா விஷ்ணு

மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Oct 3, 2024 - 18:06
 0
மாற்றுத்திறனாளிகளை அவமதித்த வழக்கு - ஒருவழியாக ஜாமின் பெற்ற மகா விஷ்ணு
மகாவிஷ்ணுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்ஜென்மம் குறித்து மகா விஷ்ணு சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அப்போது, முன் ஜென்மத்தில் தவறுகள், பாவங்கள் செய்ததால் தான் இப்போது மாற்றுத் திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் இருக்கிறார்கள் என பேசியிருந்தார்.

அப்போது அதே பள்ளியில் வேலை பார்த்து வரும் மாற்றுத்திறனாளி ஆசிரியரான சங்கர், மகா விஷ்ணுவின் கருத்து தவறு என எதிர்ப்புத் தெரிவித்தார். அதனையடுத்து மகா விஷ்ணுவுக்கும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மகா விஷ்ணுவின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பொதுமக்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளி விஜயராஜ் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மகாவிஷ்ணு கடந்த 7ஆம் தேதி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஜாமீன் கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை எனவும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும், தனது பேச்சு எடிட் செய்யப்பட்டு யூ டியூபில் வெளியிடப்பட்டதாகவும், முழு பேச்சை கேட்காமல், தனக்கு எதிராக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருக்கிறார். எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கைதானதாகவும், காவலில் வைத்து போலீசார் விசாரித்த போது முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், தனது அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், வீடியோ தொகுப்புகள் என அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மகா விஷ்ணுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow