Vettaiyan: ரஜினியின் வேட்டையன் ரிலீஸுக்கு தடைவிதிக்க மனு... நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு இதுதான்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. அதில், என்கவுன்டர் தொடர்பான வசனம் இடம்பெற்றிருப்பதாகல், வேட்டையன் ரிலீஸுக்கு தடைவிதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சென்னை: தசெ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாஸில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜெயிலர் படம் மூலம் கம்பேக் கொடுத்த ரஜினிக்கு, அவர் கேமியோவாக நடித்த லால் சலாம் ஏமாற்றம் கொடுத்தது. இதனால் மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் சூப்பர் ஸ்டார்.
ஜெய்பீம் திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தசெ ஞானவேல், வேட்டையன் படத்தை ரஜினியின் ஹிட் லிஸ்ட்டில் இடம்பிடிக்கச் செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனிடையே நேற்று வெளியான வேட்டையன் ட்ரெய்லர், படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதேநேரம் அதுவே இந்தப் படத்தின் ரிலீஸுக்கும் சிக்கலாக உருவாகியுள்ளது. அதாவது வேட்டையன் படத்தில் என்கவுன்டரை ஆதரிக்கும் வகையில் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் வேட்டையன் ரிலீஸுக்கு தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த பழனிவேலு என்பவர், மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், வேட்டையனில் இடம்பெற்றுள்ள என்கவுன்டர் தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் எனவும், அதுவரை படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, சட்டவிரோத என்கவுன்டரை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கை உருவாக்கும் வகையில் வசனம் இடம்பெற்றுள்ளது. இதனை நீக்கக் கோரி அதிகாரிகளிடம் முறையிடும் நடவடிக்கை இல்லை. ஆகவே வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்டர் தொடர்பான வசனங்களை நீக்கவோ அல்லது மியூட் செய்யவோ உத்தரவிட வேண்டும். அதுவரை வேட்டையன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வேட்டையன் படத்தில் “அநியாயம் நடக்கும்போது போலீஸ் அமைதியா இருக்குறத விட அதிகாரத்த கையில எடுக்குறது தப்பில்ல” என ரஜினி ஒரு வசனம் பேசியிருந்தார். இதனை குறிப்பிட்டு தான் இந்த வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில், வேட்டையன் படத்தின் ரிலீஸுக்கு இடைக்கால தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியாக கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், என்கவுன்டரை ஆதரிப்பது போல வேட்டையன் படத்தில் காட்சிகளும், வசனங்களும் வருகின்றன. எனவே இந்தப் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
அப்போது மனு குறித்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், லைகா நிறுவனத்தித்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, வேட்டையன் படத்திற்கு இடைக்கால தடைவிதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையையும் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
What's Your Reaction?






