Chennai Car Race: ஃபார்முலா 4 கார் பந்தயம் கோலாகலமாக நிறைவு... முதலமைச்சர், பிரபலங்கள் பாராட்டு!
சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் கோலாகலமாக நிறைவுபெற்றது. இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னை: தெற்காசியாவிலே முதல் முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம், கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கிய இப்போட்டியை, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனையடுத்து முதலில் பயிற்சிப் போட்டிகளும், அதன் பின்னர் தகுதிச் சுற்று, பிரதான போட்டிகளும் நடைபெற்றன. இதில், ஃபார்முலா 4 ரேஸ் இந்தியன் சாம்பியன்ஷிப்பின் முதல் ரேஸில் 16 வீரர்கள் கலந்துகொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், ஆஸ்திரேலியா வீரர் பார்டர், 19 நிமிடம் 42 வினாடிகளில் முதலிடம் பிடித்து அசத்தினார். இந்திய வீரர்கள் ருஹான் அல்வா 2வது இடத்தையும், அபை மோஹன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப்பின் 2-வது ரேஸில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அலிபாய் முதல் இடத்தையும், இந்தியாவைச் சேர்ந்த திவி நந்தன் 2வது இடத்தையும், ஜேடன் பாரியர்ட் 3வது இடத்தையும் பிடித்தனர். அதன்பிறகு நடைபெற்ற இந்தியன் ரேஸிங் லீக்கின் முதல் போட்டியில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஹய்முன் முதலிடத்தையும், செக்குடியரசை சேர்ந்த கேபிரிலா 2வது இடத்தையும், மலேசியாவை சேர்ந்த அலிஸ்டர் 3வது இடத்தையும் பிடித்தனர். தொடர்ந்து நடைபெற்ற 2வது ரேசில், போர்ச்சுகலைச் சேர்ந்த ஆல்வெரோ முதல் பரிசு வென்றார். இந்தியாவைச் சேர்ந்த சுனில் ஷா 2-வது, ராஜிவ் 3-வது பரிசுகளை வென்றனர்.
இதையடுத்து வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கி கெளரவித்தார். இந்தப் போட்டியை நடிகர்கள் நாகசைதன்யா, ஜான் ஆபிரகாம், அர்ஜுன் கபூர், முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட பலர் கண்டு ரசித்தனர். இந்தப் போட்டி குறித்து பேட்டி கொடுத்திருந்த கங்குலி, ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளன. இதனை டிவியில் பார்க்கும் போது அற்புதமாக இருக்கிறது எனக் கூறியிருந்தார். அதேபோல், நடிகர் நாகசைதன்யா, அர்ஜுன் கபூர், ஜான் ஆபிரகாம் ஆகியோரும் ஃபார்முலா 4 கார் பந்தயம் சிறப்பாக நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாக பாராட்டினர்.
அதேபோல், ஃபார்முலா 4 கார் பந்தயம் மூலம் சென்னைக்கு பெருமை கிடைத்திருக்கும் என நம்புவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கார் பந்தயம் நிறைவுப் பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்தாண்டும் கார் பந்தயம் நடத்துவது தொடர்பாக கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார். இந்நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயம் சிறப்பாக நடைபெற்று முடிந்ததை பாராட்டி முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
அதில், “உதயநிதிக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் மாபெரும் பாராட்டுகள். செஸ் ஒலிம்பியாட், சென்னை ஓபன், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை, தமிழ்நாடு சர்வதேச சர்ஃப் ஓபன், ஸ்குவாஷ் உலகக் கோப்பை, கேலோ இந்தியா ஆகியவற்றை நடத்தி தமிழகம் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குகிறது. இந்திய விளையாட்டுகளின் எதிர்காலத்திற்கு தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது, தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக உயர்த்துவோம் எனவும் பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?