Pon Manickavel: 4 வாரங்களுக்கு CBI அலுவலகத்தில் கையெழுத்து... பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை ஜாமீன்!
Madurai High Court Grant Bail To Pon Manickavel : சிலை கடத்தல் பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு, நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Madurai High Court Grant Bail To Pon Manickavel : முன்னாள் சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நான்கு வார காலத்திற்கு காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி அவர் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இரு நபர் ஜாமீன் கொடுக்க வேண்டும் எனவும், 25,000 ரூபாய் வைப்பு தொகையாக வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல், சிபிஐ பதிவு செய்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "நீதிமன்றம் சிலை கடத்தல் வழக்கை டிஐஜி தரத்திற்கு குறையாத அலுவலரைக் கொண்டு, விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் சிபிஐயின் காவல் கண்காணிப்பாளர் வழக்குப் பதிவு செய்துள்ளார். அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை, அப்படி இருக்கையில் அவர் வழக்குப் பதிவு செய்தது ஏற்கத்தக்கது அல்ல, அது சட்டவிரோதமானது. தவறு செய்ததாக அறிக்கை அளிக்கப்பட்டால் விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும். சிபிஐ எனது வீட்டில் நுழைந்து பொருட்களை கைப்பற்றியது சட்டவிரோதமானது. இது என் மீதான நன்மதிப்பை குலைக்கும்விதமாக உள்ளது. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கில் பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மனுதாரர் முன்னாள் காவல்துறை மண்டல தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய பணிக் காலத்தில் பல்வேறு சிலைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும், மனுதாரர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை, அதற்கான முகாந்திரமும் இல்லை எனவே முன்ஜாமின் வழங்க வேண்டும் எனவும் வாதிட்டார். அதேபோல், சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சீனிவாசன், பொன் மாணிக்கவேலுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது எனவும், இந்த வழக்கில் மனுதாரரை கைது செய்து விசாரணை நடத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்றும் வாதம் செய்தார்.
மேலும் படிக்க - விஜய்யின் தவெக மாநாடு நடைபெறுவதில் சிக்கல்!
மேலும், பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்கினால், வழக்கின் சாட்சியங்களை கலைக்க நேரிடும். எனவே அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என எதிர்ப்புத் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கில் பொன் மாணிக்கவேல் மீது பதியப்பட்டுள்ள வழக்கு, ஜாமினில் விடுவிக்கக் கூடிய பிரிவா அல்லது வெளிவர முடியாத பிரிவா என்பது குறித்து விளக்கம் தேவை எனக் கூறி விசாரணையை இன்று ஒத்தி வைத்திருந்தார். அதன்படி இன்று மீண்டும் பொன் மாணிக்கவேலின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலை கடத்தல் பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு, நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
What's Your Reaction?