TVK Vijay: தவெக மாநாடு நடப்பதில் சிக்கல்..? சாய் பாபா கோயிலில் விஜய்... என்னய்யா நடக்குது அங்க..?
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த மாநாடு நடப்பதில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான விஜய் சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் களமிறங்குகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள அவர், 2026 தேர்தலில் போட்டியிடவிருப்பதாக அறிவித்துவிட்டார். இதனால் மொத்தமாக சினிமாவில் இருந்தே விலக முடிவு செய்துள்ள விஜய், தற்போது கோட் படத்தில் நடித்துள்ளார். அதன்படி வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் செப். 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதனையடுத்து மேலும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார் விஜய். இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் தவெக கட்சியின் கொடி அறிமுகம், மாநாடு என அரசியலிலும் பிஸியாகிவிட்டார்.
கடந்த வாரம் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை அறிமுகம் செய்தார் விஜய். இதன் அடுத்தக்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 23ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. விக்கிரவாண்டியை அடுத்த வி. சாலை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறவுள்ளதாகவும், அதற்காக 100 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், விக்கிரவாண்டி மாநாட்டில் சுமார் 1.5 லட்சம் தொண்டர்களை பங்கேற்க வைக்கவும் தவெக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்த மாநாட்டுக்கு பாதுகாப்பு கோரி தவெக சார்பில் விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் உடனிருந்தார். அதேபோல், விரைவில் விஜய்யும் மாநாட்டு திடலை நேரில் சென்று ஆய்வு செய்யவிருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க - ஜமா ஓடிடி திரைப்பார்வை
இந்நிலையில், தவெக மாநாடு நடைபெறுவதில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறவுள்ள இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இருப்பதாகவும், இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே தவெக மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி அளிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே கோட் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இப்போது தவெக மாநாட்டுக்கும் அனுமதி கிடைப்பதில் புதிய பஞ்சாயத்து வந்துள்ளது.
கோட் சிறப்புக் காட்சி, தவெக மாநாடு பிரச்சினைகளுக்கு மத்தியில் விஜய் மகாராஷ்டிரா பறந்துள்ளார். அங்குள்ள சீரடி சாய் பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக விஜய் தனி விமானத்தில் மகாராஷ்டிரா சென்றுள்ளார். அவர் மீண்டும் சென்னை வந்த பின்னரே தவெக மாநாடு பற்றிய அடுத்தக்கட்ட தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நேற்று நடைபெறவிருந்த கோட் பிரஸ்மீட் நிகழ்ச்சி கடைசி நேரத்து கேன்சல் ஆனது. அதேநேரம் நாளை மாலை கோட் 4வது பாடல் வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






