கோவிலில் ரீல்ஸ் வீடியோ.. சாமிக்கு என்ன மரியாதை?.. பெண் தர்மகர்த்தாவுக்கு கண்டனம்
கோவிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் தர்மகர்த்தா உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
திருவேற்காடு கோவிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் தர்மகர்த்தா உள்ளிட்டோருக்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, திருவேற்காட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் கோவிலில், 12 பெண்களுடன் நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கோவில் பெண் தர்மகர்த்தா வளர்மதி மீது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கோவில் வளாகத்துக்குள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை புறக்கணித்து, பெண் தர்மகர்த்தா, கோவில் வளாகத்தில் மொபைல் போன் பயன்படுத்தியதுடன், ரீல்ஸ் வீடியோ எடுத்தது பக்தர்களின் உணர்வை புண்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தர்அப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவில் பெண் தர்மகர்த்தா வளர்மதி உள்ளிட்டோர், சாமி படத்துக்கு கீழ் இருக்கையை போட்டுக் கொண்டு, "ராஜினாமா செய்வதாக"க் கூறி, அரசு படத்தில் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சியைப் போல, ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதி தண்டபாணி, கோவில் வளாகத்துக்குள் ரீல்ஸ் வீடியோ எடுத்தால் சாமிக்கு என்ன மரியாதை? எல்லாரும் வேப்பிலை கட்டி வேண்டுதல்களை நிறைவேற்றி வரும் நிலையில், சாமி மீது பயம் வேண்டாமா? இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தை தீவிரமாக பார்ப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி, தர்ம கர்த்தா உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அக்டோபர் 29ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.
What's Your Reaction?