சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் கூண்டோடு வெளியேற்றம்
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
2025-ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவை வளாகத்தில் கூடினர். தொடர்ந்து, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் 'யார் அந்த சார்’ என்று அச்சிடப்பட்ட பேட்ஜுடன் சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதும் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கோஷமிட்டனர். இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு உத்தரவின் பேரில் அதிமுகவினர் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
முன்னதாக, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியதும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அதாவது, முதலில் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் ஆத்திரமடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் இருந்து வந்த மூன்று நிமிடத்தில் வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இந்த ஆண்டாவது ஆளுநர் ஆர்.என்.ரவி முழுமையாக தனது உரையை வாசிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வந்த வேகத்தில் ஆளுநர் வெளியேறியது அதிருப்தியை ஏற்படுத்தியதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, கடந்த இரண்டு வருடங்களாக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியுள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கியது. அப்போது உரையை வாசிக்க ஆரம்பித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டதுடன் தேசிய கீதத்திற்கு போதிய மரியாதை தரவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ஆளுநர் உரையில் உண்மை தன்மை மற்றும் தார்மிக கருத்துகளில் முரண்பாடு இருப்பதாக கூறி உரையை புறக்கணித்தார்.
அதுமட்டுமல்லாமல், ஆளுநர் ஆர்.என்.ரவி வெறும் மூன்று நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டதால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அப்போது, மழை வெள்ள நிவாரண நிதியாக ஒரு பைசா கூட வரவில்லை.
மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றே குறைந்தவர்கள் அல்ல... ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?