சிறை கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில் முறைகேடு.. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

சிறை கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில்  அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருந்தால்,  சஸ்பெண்ட் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jan 8, 2025 - 17:48
 0
சிறை கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில்  முறைகேடு.. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சிறை கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில்   அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருந்தால்,  சஸ்பெண்ட் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவர் சிறையில் பார்த்த வேலைக்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியம் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை என கூறி புதுச்சேரியை சேர்ந்த கோகிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு விசாரணையின் போது, தமிழகத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் 14 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக மத்திய தணிக்கை துறை கூறியது தொடர்பாக செய்தி தாள்களில் வெளியான செய்தியை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். 

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 இந்த வழக்கு  நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், இந்த விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிக்கையை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து  அவர்,  வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மூன்று அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தவறிழைத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நியாயமாக விசாரணை நடைபெறும் எனவும் உறுதி அளித்தார். 

இதனையடுத்து, தவறு செய்தவர்களை  சீர்திருத்துவதற்கு சிறைக்கு அனுப்புகிறோம்... ஆனால் சிறையில் இருக்கும் சிறைத்துறை அதிகாரிகள் தவறிழைப்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என நீதிபதிகள் கூறினர்.

இந்த விவகாரத்தில் தவறிழைத்த உயர் அதிகாரிகள் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தவறிழைத்ததற்கான முகாந்திரம் இருந்தால் சஸ்பெண்ட் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையை விரைவுப்படுத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அறிக்கை தாக்கல் செய்வதற்காக வழக்கை ஏப்ரல் நான்காம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow