Rameshwaram Fishermen Released From Sri Lankan Prison : எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது தற்போது தொடர்கதையாகிவிட்டது. அண்மையில் இலங்கைக் கடற்படையினர் தாக்கியதில் தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 13 மீனவர்கள் நடுக்கடலில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடல் படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 13 மீனவர்களையும் கைது செய்து சிறையிலடைத்ததோடு, அவர்கள் பயன்படுத்திய 3 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டடங்களை நடத்தினர். இந்நிலையில் இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் கடந்த வாரம் 3 படகுளை நாட்டுடமையாக்கி, படகு ஓட்டுநர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.
இப்படி தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படும்போதும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை இந்திய அரசு கண்டிக்க வேண்டும். மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.
இதற்கு பதில் கடிதம் எழுதிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ''தமிழ்நாடு மீனவர்களின் நலனை காப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. பாஜக அரசு பதவியேற்றது முதல் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் குறைந்துள்ளது'' என்று தெரிவித்திருந்தார்.
இப்படியாக முதலமைச்சர் ஸ்டாலினும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் மாறி, மாறி கடிதம் எழுதிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்களே தவிர, இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்துக்கு முடிவுகட்ட இதுவரை எந்த நிரந்தர நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் மத்திய, மாநில அரசுகள் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையை முழுவதுமாக தடுத்து நிறுத்தி, மீனவர்களின் நலனை காக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் ஒரே குரலாக இருந்தது.
மேலும் படிக்க: எலான் மஸ்க்கிற்கு ஆப்பு... ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!
இந்நிலையில், இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்கள் நேற்று (ஆகஸ்ட் 16) விடுதலை செய்யப்பட்டனர். பின்பு கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவர்களை, தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் உற்சாகத்துடன் வரவேற்றனர். இதையடுத்து அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களை மூலம், 13 பேரையும் அவர்களது சொந்த ஊரான ராமேஸ்வரம், புதுக்கோட்டைக்கு அனுப்பி வைத்தனர்.