சட்டப்பேரவை கூட்டத்தொடர்: வந்த வேகத்தில் வெளியேறிய ஆர்.என்.ரவி.. ஆளுநர் மாளிகை விளக்கம்
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தொடங்கியது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியதும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அதாவது, முதலில் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் இருந்து, வந்த மூன்று நிமிடத்தில் வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இந்த ஆண்டாவது ஆளுநர் ஆர்.என்.ரவி முழுமையாக தனது உரையை வாசிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வந்த வேகத்தில் ஆளுநர் வெளியேறியது அதிருப்தியை ஏற்படுத்தியதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன.
தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.
ஆளுநர் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான முதலமைச்சரிடமும், சட்டப்பேரவை சபாநாயகரிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.
இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்” என்று ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
முன்னதாக, சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்து பதிவு வெளியிடப்பட்ட நிலையில் அப்பதிவு சில நிமிடங்களில் நீக்கப்பட்டு மீண்டும் பதிவு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும்… — RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 6, 2025
What's Your Reaction?