Ameer: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்துக்கு 10 லட்சமா..? அரசுக்கு பருத்தி வீரன் அமீர் அட்வைஸ்!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது. இதனை இயக்குநர் அமீர் விமர்சித்துள்ளதுடன், தமிழ்நாடு அரசுக்கும் அட்வைஸ் செய்துள்ளார்.
சென்னை: கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் கள்ளச்சாராயம் அருந்தியதில் இதுவரை 66 பேர் உயிரிழந்தனர். இதுதவிர சிலருக்கு கண் பார்வை பறிபோனது, மேலும் சிலர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்தண்டு மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில் பலர் உயிரிழந்தனர். அப்போதே கள்ளச்சாராய தடுப்பில் தமிழ்நாடு அரசு முனைப்புக் காட்டியிருந்தால், கள்ளக்குறிச்சி சம்பவம் அரங்கேறியிருக்காது என்பதே பலரின் கருத்தாக உள்ளது. இதனிடையே கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது.
அதேபோல், பாதிக்கப்பட்டவர்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இதற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்களிடம் இருந்து ஆதரவு, எதிர்ப்பு என இருவேறு விதமான மனநிலை காணப்பட்டது. ஒருதரப்பினர் ஆபத்து என தெரிந்தே, கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு மக்களின் வரிப் பணத்தில் இருந்து எப்படி நிவாரணம் வழங்கலாம் என விமர்சித்தனர். இன்னும் சிலரோ நிவாரணம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தான், இதில் அரசியல் செய்ய வேண்டாம் என ஆதரவு தெரிவித்திருந்தனர். அதேபோல் இலக்கியவாதிகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை விட, கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு தான் அதிக நிவாரணம் வழங்கப்படுகிறது எனவும் விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில், இயக்குநர் அமீரும் தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்கியது பற்றி கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணத்துக்கு தமிழக அரசு 10 லட்சம் கொடுத்தது ஏற்புடையது அல்ல. அதற்கு பதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அரசு உதவியிருக்க வேண்டும் எனக் கூறினார். அதாவது உயிரிழந்தவர்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்கான செலவை அரசு செய்திருக்க வேண்டும் என்பதாக அமீர் பேசியதாக தெரிகிறது. அமீரின் இந்த கருத்தை நெட்டிசன்கள் சிலர் வரவேற்றிருந்தாலும், இன்னும் சிலர் விமர்சித்துள்ளனர்.
10 லட்சம் நிவாரணம் என்பது, குழந்தைகளின் கல்வி உதவிக்கு மட்டுமின்றி, அந்த குடும்பத்தில் உள்ள முதியவர்கள், பெண்களுக்கும் பயன்படும். ஆனால், அமீர் சொல்வதை போல குழந்தைகளுக்கு மட்டுமே அரசு உதவி செய்ய வேண்டும் என்றால் அதில் சிக்கல்கள் எழும் என கமெண்ட்ஸ் செய்துள்ளனர். கடந்தாண்டு மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரணமாக, தமிழக அரசுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி கொடுத்திருந்தார் அமீர். அப்போது அவருடன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக்கும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது. போதைப் பொருள் வழக்கில் ஜாபர் சாதிக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அமீரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
What's Your Reaction?