Mohanlal: அதிர வைத்த பாலியல் சர்ச்சை... மோகன்லால் உட்பட நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!

Actor Mohanlal Resigns at Malayalam Film Industry : மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இச்சம்பவம் குறித்து நீதிபதி ஹேமா கமிட்டி தலைமையில் அறிக்கை சமர்பிக்கப்பட்ட நிலையில், மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார். அவருடன் மற்ற நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

Aug 27, 2024 - 15:54
Aug 31, 2024 - 18:25
 0
Mohanlal: அதிர வைத்த பாலியல் சர்ச்சை... மோகன்லால் உட்பட நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!
மலையாள நடிகர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து மோகன்லால் ராஜினாமா

Actor Mohanlal Resigns at Malayalam Film Industry : இந்தியளவில் ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படுவது மலையாள படங்கள் தான். உலக சினிமாவுக்கு நிகராக படங்கள் எடுப்பதில் மலையாள திரையுலகம் முன்னணியில் உள்ளது. மோகன்லால், மம்முட்டி, பிருத்விராஜ், ஃபஹத் பாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி, டொவினோ தாமஸ் என திறமையான நடிகர்களுக்கு பஞ்சமே கிடையாது. அதேபோல், மலையாள திரையுலகில் நடிகைகளும் பெரிய அளவில் கவனம் ஈர்த்து வருகின்றனர். இந்நிலையில், மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.   

அதாவது கடந்த 2017-ம் ஆண்டு, திலீப் உள்ளிட்ட மேலும் சில நடிகர்கள், நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. முக்கியமாக பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், நடிகைகள் பாலியல் துன்புறுத்தல் குறித்த பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக, நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.  

நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி மேற்கொண்ட ஆய்வின் படி, மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் பெரும்பாலும் பாலியல் தொல்லைக்கு ஆளாவது தெரியவந்தது. மேலும், அவர்கள் பாதுகாப்பு குறித்து மிகவும் அச்சத்துடன் இருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகளுக்கு நடக்கும் மோசமான சம்பவங்களைத் தவிர்க்க, அவர்களது பெற்றோர்களும் உறவினர்களும் உடன் சென்று வருவதாக சொல்லப்பட்டது. அதேபோல், படப்பிடிப்புக்குச் சென்ற நடிகைகள் தங்கியுள்ள ஹோட்டல் ரூம்களில், நடிகர்கள் அத்துமீறி நுழைய முயற்சிப்பதும், பாலியல் துன்புறுத்தல் செய்வதும் தெரியவந்தது.   

படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதால், நடிகைகள் இதுபற்றி புகார் தெரிவிக்காமல் அமைதி காத்துள்ளனர். மேலும், மலையாள திரையுலகில் கிரிமினல்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்களுக்காக இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வலியுறுத்துவதாகவும் ஹேமா கமிட்டி அறிக்கை கூறியிருந்தது. இன்னும் இதுபோல பல பிரச்சினைகளை நடிகைகள் சந்தித்து வருவதாக, ஹேமா கமிட்டி அளித்த அறிக்கையின் மூலம் தெரியவந்தது. அதேநேரம் இளம் நடிகைகள் சிலர் மலையாள மூத்த நடிகர் சித்திக், இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்ட மேலும் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். 

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து கேரள அரசு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. அதேபோல், மலையாள முன்னணி நடிகர்கள், நடிகைகள் சிலரும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, மலையாள நடிகர் சங்க தலைவரான மோகன்லால் விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வந்தன. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் நடிகர் சங்க அமைப்பான ‘அம்மா’-வில் இருந்து தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மோகன்லால். இந்த சங்கத்துக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. 

அப்போது அம்மா சங்கத்தின் தலைவராக மோகன்லாலும், செயலாளராக எடவேல பாபுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், மோகன்லால் தலைமையிலான அம்மா சங்கத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள், மலையாள திரையுலகினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கிய திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தார் மோகன்லால். நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தில், நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் திலீப். ஆனால், அதனை பொருட்படுத்தாமல் திலீப்புக்கு ஆதரவாக மோகன்லால் செயல்பட்டது சர்ச்சையானது. 

மேலும் படிக்க - சூரியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

மோகன்லால் மட்டுமின்றி மம்முட்டி போன்ற மூத்த நடிகர்களும் திலீப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக சொல்லப்படுகிறது. மலையாள நடிகர் சங்கத்துக்கு திலீப் பலவிதங்களில் உதவியதாகவும், மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் அவர் மிகவும் நெருக்கம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பலரது எதிர்ப்பையும் மீறி திலீப்பை நடிகர் சங்கத்துக்குள் மீண்டும் கொண்டு வந்தார் மோகன்லால். இதன் காரணமாக மோகன்லாலை நடிகைகள் பலரும் வெளிப்படையாக கண்டித்தனர், மேலும் நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டங்களிலும் இந்த எதிர்ப்பு காணப்பட்டது. 

இந்த சூழலில் தற்போது ஹேமா கமிட்டி அறிக்கையும் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், பதவிக்காலம் முடியும் முன்பே அம்மா சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மோகன்லால். அதேபோல், 29 ஆண்டுகளாக நடிகர் சங்க பொறுப்பில் இருக்கும் எடவேல பாபு உட்பட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். நிர்வாகிகள் தவிர மொத்தம் 506 உறுப்பினர்கள் அம்மா சங்கத்தில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக அம்மா சங்க நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளது, மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், இனிமேல் அம்மா சங்கத்தின் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் மோகன்லால் அறிவித்துள்ளார். இதனையடுத்து மலையாள நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow