`கங்குவா' திரைப்படம் வெளியிட நிபந்தனையுடன் அனுமதி - சென்னை உயர் நீதிமன்றம்
நடிகர் சூர்யாவின் ‘கங்குவா' படத்தை நாளை திட்டமிட்டபடி வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
டிசம்பர் 11 ஆம் தேதிக்குள் ரூ.3.75 கோடி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதியளித்துள்ளது.
இரு வேறு வழக்குகளில் எட்டு கோடியே ஒரு லட்சம் ரூபாயை செலுத்திய நிலையில், மூன்று கோடியே 75 லட்சம் ரூபாயை டிசம்பர் 11ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கங்குவா படத்தை வெளியிட ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பெற்ற 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடனை வசூலிக்க உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் நடவடிக்கை எடுத்தார். இதுசம்பந்தமான வழக்கில் கங்குவா படத்தை செளியிடும் முன் ஒரு கோடியை டெபாசிட் செய்ய ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் உரிய நேரத்தில் பணம் டெபாசிட் செய்யப்படாததால், நவம்பர் 13ம் தேதிக்குள் 20 கோடி ரூபாயை டெபாசிட் செய்யாமல் கங்குவா படத்தை வெளியிட தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் சி.வி.கார்த்திகேயன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் 6 கோடியே 41 லட்சத்தில் 96 ஆயிரத்து 969 ரூபாய் சொத்தாட்சியருக்கு செலுத்தப்பட்டு விட்டதால் கங்குவா படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டுமென மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்க மறுத்த சொத்தாட்சியர் தரப்பு வழக்கறிஞர், 100 கோடி ரூபாய் திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது. 20 கோடி ரூபாயை அவர்களால் செலுத்த முடியும் என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மேலும் மூன்று கோடியே 75 லட்சம் ரூபாயை டிசம்பர் 11ஆம் தேதிக்குள் செலுத்தி விடுவதாகவும் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் ஸ்டுடியோ கிரீன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் டிசம்பர் 11ஆம் தேதிக்குள் மூன்று கோடியே 75 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கங்குவா படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டனர். மேலும் 3 கோடியே 75 லட்சம் செலுத்துவது தொடர்பாக நாளை மாலைக்குள் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை டிசம்பர் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதற்கிடையில், தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இந்தி உரிமைக்காக பெற்ற ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை வட்டியுடன் சேர்த்து 11 கோடி ரூபாயாக திருப்பித்தராமல் கங்குவா படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி பியூவல் டெக்னாலஜிஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு தலைமைப் பதிவாளர் பெயரில் இரு வரைவோலைகள் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, படத்தை வெளியிட ஆட்சேபம் இல்லை என பியூவல் டெக்னாலஜிஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதனை பதிவு செய்த நீதிபதி, கங்குவா படத்தை வெளியிட அனுமதியளித்து உத்தரவிட்டார். மேலும் இரண்டு வரைவோலைகளையும் வங்கியில் செலுத்தி பணமாக்கி, அதனை நிரந்தர வைப்பீடாக வைக்க வேண்டும் என தலைமைப் பதிவாளருக்கும் உத்தரவிட்டார்.
What's Your Reaction?