ரஷ்ய அதிபர் புதினுடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு!

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி செய்து வருகிறார்.

Sep 13, 2024 - 13:57
 0
ரஷ்ய அதிபர் புதினுடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு!
Vladimir Putin And Ajit Doval

மாஸ்கோ: பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டம் ரஷ்யாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள கான்ஸ்டான்டினோவ்ஸ்கி அரண்மனையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். இருவரும் கைகுலுக்கியபடி சந்தித்து பேசும் வீடியோ காட்சிகளை இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ளது.

அப்போது ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து  புதினுடன் அஜித் தோவல் பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில்,  இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யா சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசிய பிரதமர் மோடி , ’போர் எந்த ஒரு தீர்வையும் கொண்டு வராது. ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும்’ என்று கூறியிருந்தார். 

இதன்பிறகு பிரதமர் மோடி, கடந்த மாத இறுதியில் உக்ரைன் பயணம் மேற்கொண்டார். இந்தியா ரஷ்யாவின் நெருங்கிய நண்பராக விளங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி உக்ரைன் சென்றது உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. போரில் இந்தியா தங்கள் பக்கம் இல்லை என்று அடிக்கடி குற்றம்சாட்டிய உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடியை கட்டித்தழுவி வரவேற்று ஆச்சரியப்படுத்தினார். இந்த சந்திப்பின்போது உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம், இந்தியா-உக்ரைன் இடையிலான உறவு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஜெலன்ஸ்கியும், மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் உக்ரைனில் பேசிய பிரதமர் மோடி, போர் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு தராது. ரஷ்யா-உக்ரைன் முடிவுக்கு வர வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்று கூறினார்.

இப்படி ரஷ்யா-உக்ரைன் போரை  முடிவு கட்டுவதில் பிரதமர் மோடி மூவ் செய்து வருவதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசி இருக்கலாம் என கூறப்படுகிறது. அடுத்த மாதம் பிரதமர் மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா செல்ல உள்ள நிலையில், புதின்-மோடி இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அப்போது  ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து இருவரும் விவாதிக்க உள்ளனர். முன்னதாக, அஜித் தோவல் ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செர்கெய் சோய்க்குவை சந்தித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow