6 மாதங்களுக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்... சிபிஐ நடவடிக்கையை விமர்சித்த நீதிபதி!
''சில வழக்குகளில் சிபிஐ கைது செய்யும் தருணம் கேள்விகளை எழுப்புகிறது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபிறகு, சிபிஐ கைது நடவடிக்கையில் ஈடுபட்டது ஏமாற்றம் அளிக்கிறது. சிபிஐ கூண்டுக்கிளியாக இருக்கக் கூடாது’’என்று நீதிபதி உஜ்ஜல் புயன் தெரிவித்துள்ளார்.
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வரும் நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு அங்கு விஸ்வரூபம் எடுத்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி மூத்த தலைவருமான, துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக 21 நாள்களுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. பின்னர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவால், மீண்டும் சிறைக்கு சென்றார். இது தொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்பு அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் , திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கெஜ்ரிவாலை சிபிஐ அதிரடியாக கைது செய்தது.
இதனால் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை. கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்து விடக்கூடாது என்பதற்காக அவரை வேண்டுமென்றே மத்திய அரசு மீண்டும் மீண்டும் கைது செய்வதாக கெஜ்ரிவாலின் மனைவி உள்பட ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டினார்கள். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்து இருந்தார். உடல்நிலையை காரணம் காட்டி கெஜ்ரிவால் ஜாமீன் கேட்ட நிலையில், அதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், சிபிஐ வழக்கில் உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். கெஜ்ரிவால் ரூ.10 லட்சம் பிணைத்தொகை கட்ட வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக பொதுவெளியில் பேசக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கினாலும் இரு நீதிபதிகளும் அவர் கைது விவகாரத்தில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது நீதிபதி சூர்யகாந்த் தனது உத்தரவில், ‘’அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐயால் சட்டப்படி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இது தனி ஒருவரின் சுதந்திரத்தை பற்றியது. ஏனெனில் நீண்ட கால சிறைவாசம் ஒருவரின் சுதந்திரத்தை பறிக்கிறது’’ என்று கூறியுள்ளார்.
அதே வேளையில் இதற்கு எதிராக கருத்து தெரிவித்த நீதிபதி உஜ்ஜல் புயன், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது நியாயமற்றது என்று சாடியுள்ளார். ‘’சில வழக்குகளில் சிபிஐ கைது செய்யும் தருணம் கேள்விகளை எழுப்புகிறது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபிறகு, சிபிஐ கைது நடவடிக்கையில் ஈடுபட்டது ஏமாற்றம் அளிக்கிறது. சிபிஐ கூண்டுக்கிளியாக இருக்கக் கூடாது’’என்று நீதிபதி உஜ்ஜல் புயன் தெரிவித்துள்ளார்.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் ஆம் ஆத்மி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
What's Your Reaction?