2025 ஐபிஎல் போட்டியில் தோனி... மனம் திறந்த ‘சின்ன தல’ ரெய்னா..
2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் துணைக் கேப்டன் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தலைமையேற்று அவர், 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில், தோனி கோப்பையை வென்று கொடுத்து தனது ஓய்வை அறிவிப்பார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தர்.
இதனால், அவரின் அதிரடி ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். இதனால், சென்னையில் மட்டுமல்லாது, மும்பை டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு மைதானங்களிலும் மஞ்சள் படை அதிகளவில் குவிந்ததால் எங்கும் மஞ்சள் வியாபித்து காணப்பட்டது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக பெங்களூரு அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் தோல்வியை தழுவி, நாக் அவுட் சுற்றை தவறவிட்டது. இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும், அடுத்த சீசனிலும் தோனி விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். தோனியும், சென்னையில் தனது ஓய்வை அறிவிக்க விரும்புவதாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சிஎஸ்கே அணியின் முன்னாள் துணை கேப்டனும், தோனியின் பக்கபலமாக திகழ்ந்தவருமான ரசிகர்களால், ‘சின்ன தல’ என்று அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, அடுத்த தொடரிலும் தோனி விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள ரெய்னா, “கடந்த ஆண்டு எப்படி விளையாடினார் என்பதை பார்க்கும்போது, 2025ஆம் ஆண்டும் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். கேப்டனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ருதுராஜ்-க்கு மேலும் ஒரு ஆண்டு தேவைப்படும் என்று நினைக்கிறேன். ஆர்சிபியிடம் தோற்ற பிறகு நிறைய விஷயங்கள் பேசப்பட்டன. எப்படியாகினும், ருதுராஜ் தனது பணியை சிறப்பாகவே முடித்திருந்தார்” என்றார்.
ஐபிஎல் போட்டிகளில் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற விதி உள்ள நிலையில், தோனியை சிஎஸ்கே அணி மீண்டும் தக்கவைக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், “ஐபிஎல் தொடரில், என்ன மாதிரி முடிவு செய்யப்படும் என்பதற்கு நிறைய காலம் உள்ளது.
வீரர்களை தக்கவைத்தல் போன்றவற்றில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்போது முடிவுகள் நமது எல்லைக்குட்பட்டதாக இல்லை. எனவே, விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் முறைப்படுத்தப்பட்டவுடன், அது குறித்து பேச முடியும். ஆனால் அது அணியின் நலனுக்காக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?