Rafael Nadal: உருக்கமாக வீடியோ.. ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால்... டென்னிஸ் ரசிகர்கள் சோகம்!

22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரஃபேல் நடால், டென்னிஸ் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

Oct 10, 2024 - 22:47
Oct 10, 2024 - 22:54
 0
Rafael Nadal: உருக்கமாக வீடியோ.. ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால்... டென்னிஸ் ரசிகர்கள் சோகம்!
டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்தார் நடால்

சென்னை: டென்னிஸ் உலகில் அதிற்சிறந்த வீரர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ரஃபேல் நடால். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நடால், மிக இளம் வயதிலேயே சர்வதேச டென்னிஸில் கவனம் ஈர்க்கத் தொடங்கினார். 2001ம் ஆண்டு முதல் மெல்ல மெல்ல உச்சம் தொட்ட நடால், ஒருகட்டத்தில் அசைக்க முடியாத வீரராக கெத்து காட்டினார். இடக்கை ஆட்டக்காரர்களில் நடாலின் நுணுக்கங்களும் மிக நுட்பமான தாக்குதல் ஆட்டமும் எதிரில் இருப்பவர்களை கலங்கடித்து விடும். டென்னிச் விளையாட்டில் அப்படியொரு தனித்துவமான ஆட்டத்துக்குச் சொந்தக்காரர் நடால்.

முக்கியமாக களிமண் தரையில் ரஃபேல் நடாலின் ஆக்ரோஷமான ஆட்டத்துக்கு முன்னால், எந்த வீரரும் அவ்வளவு எளிதாக வெற்றிப் பெற்றுவிட முடியாது. இதனால் நடாலை களிமண் தரையின் கிங் என ரசிகர்கள் கொண்டாடினர். அதேபோல், ரோஜர் ஃபெடாரர் – ரஃபேல் நடால் இருவரும் களத்தில் இருந்தால், அப்போட்டியை பார்க்க கோடி கண்கள் வேண்டும். நிதானமாகவும் அதீத நுட்பங்களுடனும் ஸ்மார்ட்டாக விளையாடுவதில் கை தேர்ந்தவர் ரோஜர். அவருக்கு நேர் எதிராக ஆக்ரோஷமாக விளையாடுபவர் நடால். ஆனாலும் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டு விளையாடுவார்கள். 

ட்ராப் பால் கேம் ஆடுவதில் ரோஜர் தனித்துவமானவர் என்றால், பேக் ஹேண்ட் மூலம் வலுவான ஷாட்கள் ஆடுவதில் நடால் ஜகஜால கில்லாடி. அதேபோல், ஏஸ் சர்வீஸ்களை வீசுவதில் இருவரும் தனி ரகம். ரோஜர் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறும் போது கண்கள் சிவக்க கண்ணீர் விட்டு அழுதார் நடால். ஆம்! களத்தில் இருவரும் விட்டுக் கொடுக்காமல் விளையாடினாலும், அங்கிருந்து வெளியேறிவிட்டால் நெருங்கிய நண்பர்களாக ஒருவரையொருவர் மனம் திறந்து பாராட்டி மகிழ்வார்கள். ரோஜரின் ஓய்வு அறிவிப்பே டென்னிஸ் ரசிகர்களுக்கு மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அவரது வரிசையில் இப்போது நடாலும் ஓய்வு பெறுவது, டென்னிஸ் உலகில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.   

இதுவரை 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால், அடுத்த மாதம் ஸ்பெயினில் நடைபெறும் டேவிஸ் டென்னிஸ் தொடரே தனது கடைசிப் போட்டியாகும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள நடால், ”தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளும் எனக்கு மிகவும் கடினமான காலமாக இருந்தது. இந்த வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கம் இருப்பது போல முடிவும் இருக்கும். இது கடினமான முடிவாக இருந்தாலும், இது அதற்கான நேரம் தான்” என மிக உருக்கமாக பேசியுள்ளார். 

கடந்த சில ஆண்டுகளாகவே காயம் காரணமாக பெரிதும் அவதிப்பட்டு வந்தார் நடால். ஏற்கனவே பலமுறை காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகியுள்ள நடால், இந்த முறை முழுமையாக டென்னிஸில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார். நடாலின் இந்த அறிவிப்பு டென்னிஸ் ரசிகர்களை ரொம்பவே சோகத்தில் ஆழ்த்தியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow