பாராலிம்பிக்: ஒரே நாளில் 4 பதக்கங்கள் அறுவடை செய்த இந்தியா.. மாஸ் காட்டிய வீராங்கனைகள்!
பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை 4 பதக்கங்களை அறுவடை செய்துள்ளது. இந்த பதக்கங்களை இன்று ஒரே நாளில் வென்றுள்ளதும், இதில் 3 பதங்கங்களை கைப்பற்றியது பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Avani Lekara wins Gold in Air Rifle at Paralympics 2024 : உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'பாரீஸ் ஒலிம்பிக் 2024' போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கி கடந்த 11ம் தேதி நிறைவடைந்தது.மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்றனர். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி பாரீஸில் நேற்று முன்தினம் கோலாகலமாகத் தொடங்கியது.
பாராலிம்பிக் தொடரில் 4,400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 22 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் இருந்து 84 வீரர்கள், 12 விளையாட்டு பிரிவுகளில் கலந்து கொள்கின்றனர். நமது தமிழ்நாட்டை சேர்ந்த 'தங்க நாயகன்' மாரியப்பன் தங்கவேல், துளசிமதி முருகேசன், சிவராஜன் சோலைமலை, மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சுமதி சிவன், கஸ்தூரி ராஜாமணி ஆகியோர் பாராலிம்பிக் தொடரில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பாராலிம்பிக் தொடரில் இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்துள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியா வீராங்கனை அவானி லெகாரா தங்கம் வென்று அசத்தியுள்ளார். அதாவது 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் 249.7 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்த அவானி லெகாரா தங்கப் பதக்கத்தை வென்றார்.
இதே போட்டியில் பங்கேற்று 228.7 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த இந்திய வீராங்கனை மோனோ அகர்வால் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்பிறகு பாராலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு 3வது பதக்கம் கிடைத்தது. அதாவது தடகளத்தில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் வெண்கலம் வென்று சாதித்துள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை 14.21 விநாடிகளில் கடந்து 3வது இடம் பிடித்த பிரீத்தி பால், வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். இந்நிலையில், பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 4வது பதக்கமும் கிடைத்துள்ளது. அதாவது 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்த போட்டியில் 234.9 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்த மணீஷ் நர்வால் வெள்ளியை தட்டித் தூக்கியுள்ளார். இதே போட்டியில் தென் கொரிய வீரர் ஜே.டி. ஜோ 237.4 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதேபோல் 214.3 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்த சி. யாங் வெண்கலம் வென்றார். பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை 4 பதக்கங்களை அறுவடை செய்துள்ளது. இந்த பதக்கங்களை இன்று ஒரே நாளில் வென்றுள்ளதும், இதில் 3 பதங்கங்களை கைப்பற்றியது பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாராலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த துளசிமதி முருகேசன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அதாவது போர்ச்சுக்கல் வீராங்கனை மான்டீரோவை எதிர்கொண்ட அவர் 21-9, 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
What's Your Reaction?