சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்: நேரில் ஆஜராகி ஆதரவு தெரிவித்த சீமான்…!
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என காஞ்சிபுரம் மாவட்டம் காவல்துறை அறிவித்ததை தொடர்ந்து, தொழிலாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 625 தொழிலாளர்கள் கைது செய்து இரண்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்க மாநில தலைவர் சௌந்தர்ராஜன், மாநில செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட 625 பேர் மீது இரண்டு பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று உயர்நீதிமன்றம் சாம்சங் போராட்டத்திற்கு தடை இல்லை என தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று வழக்கமாக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வரும் தொழிலாளர்களை சுங்குவார்சத்திரம் பகுதியில் குன்னம் பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டு அவ்வழியே வரும் தொழிலாளர்களை போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கைது செய்து வருகின்றனர். நான்கு புறங்களிலும் காவல்துறையினர் போராட்டத்திற்கு வரும் நபர்களை வழிமடைக்கு கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும் செய்தி கேட்ட ஊழியர்கள் வேரோடு இடமான சுங்குவார்சத்திரம் அருகே தனியாருக்கு சொந்தமான விடுதிக்கு நுழைவாயில் பகுதியில் 200க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் கூடினர்.
மேலும் இன்று நடைபெற்ற போராட்டத்தில் சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாநில நிர்வாகிகள் சௌந்தரராஜன் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் காவல்துறையினர் அவர்களையும் கைது செய்தனர்.
இந்நிலையில், இன்று 27 வது நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டத்திற்கு மத்தியில் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் சீமான் கூறுகையில், “தொழிலாளர் நலனுக்கு பாதுகாப்பு கொடுப்பது தொழிற்சங்கம் தானே,அக் கோரிக்கையை நிறைவேற்ற கூடாதா? 8 மணி நேர வேலையை 12மணி நேரமாக அதிகரித்து அவர்களது உழைப்பை அட்டை பூச்சியை போல் சுரண்டுவது போல் அநியாயம் தானே, அப்போ இதனை தொழிலாளர் நலத்துறை, நீதித்துறை இந்நாட்டில் ஏற்கிறதா?” என கருத்து தெரிவித்தார்.
மேலும் சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னையில் கூட்டணி தலைவர்கள் சொன்னால் தான், கோரிக்கையாக வைத்தால் தான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவி சாய்ப்பாரா? ஏற்பாரா? என கேள்வி எழுப்பிய சீமான், இதான் மக்கள் நலன் சார்ந்த அரசா?, மக்கள் நலன் சார்ந்த தலைமையா? எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் இனி வருங்காலங்களில் தொழிலாளர் நலனை கருத்தில் கொண்டு தொழிலாள முதலாளிகளுடன் ஒப்பந்தம் போட வேண்டும், வேலை செய்யும் தொழிலாளர்களின் நலுக்காக அவர்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு ஒப்பந்தம் போட வேண்டும் என சீமான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
What's Your Reaction?