விளையாட்டு

இந்திய அணியின் பேட்டிங் கோச் இவரா?... பிசிசிஐக்கு தலைமை பயிற்சியாளர் கம்பீர் நிபந்தனை!

''கெளதம் கம்பீர் பாஜக எம்பியாக இருந்துள்ளார். இதனால்தான் பாஜக கட்டுப்பாட்டில் உள்ள பிசிசிஐ அவரை பயிற்சியாளராக தேர்வு செய்துள்ளது. இனிமேல் இந்திய அணி 'காவி' அணியாக மாறி விடும்'' என்று ஒருசிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்திய அணியின் பேட்டிங் கோச் இவரா?... பிசிசிஐக்கு தலைமை பயிற்சியாளர் கம்பீர் நிபந்தனை!
Gautam Gambhir Appointed As Head Coach

டெல்லி: இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த உலகக்கோப்பை தொடருடன் முடிந்து விட்டது. இந்திய வீரர்கள் டி20 உலகக்கோப்பையை வென்று டிராவிட்டை வெற்றியுடன் வழியனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது. இதில் இந்திய முன்னாள் வீரர் கெளதம் கம்பீரின் பெயர்தான் முதலில் அடிபட்டது. பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்க கம்பீரிடம் பேசி விட்டதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

அதன்படி கெளதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கெளதம் கம்பீர் , ''இந்திய நாட்டுக்கு சேவை செய்வது எனது வாழ்வின் மிகப்பெரும் பாக்கியம். ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும் என்பதே எனது இலக்கு. இந்திய அணி மிகப்பெரும் வெற்றிகளை பெற என்னால் முடிந்ததை செய்வேன்'' என்றார்.

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கம்பீருக்கு ஒருபக்கம் எதிர்ப்பும், ஒருபக்கம் ஆதரவும் எழுந்துள்ளன. அதாவது கம்பீருக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், ''ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய கம்பீர், 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக பணியாற்றி கோப்பையை வெல்ல வைத்துள்ளார். ஆகவே கம்பீர் சரியான தேர்வு'' என்று கூறியுள்ளனர்.

அதே வேளையில் கம்பீருக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், ''பாஜக ஆதரவாளரான கம்பீர், அந்த கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகவும் இருந்துள்ளார். இதனால்தான் பாஜக கட்டுப்பாட்டில் உள்ள பிசிசிஐ அவரை பயிற்சியாளராக தேர்வு செய்துள்ளது. இனிமேல் இந்திய அணி 'காவி' அணியாக மாறி விடும். இந்திய அணி இனிவரும் போட்டிகளில் வெற்றி பெறுவது கடினம்'' என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆக்ரோஷத்துக்கு பெயர்போன அடிக்கடி கோபத்தை கொந்தளிக்கும் கம்பீரால், இந்திய இளம் வீரர்களை சிறப்பாக வழிநடத்த முடியுமா? என்ற கேள்வியையும் ஒருசிலர் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், தனக்கு தெரிந்தவர்களையே இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக, பவுலிங்  பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என கம்பீர் பிசிசிஐக்கு நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி கம்பீரின் நெருங்கிய நண்பரும், கொல்கத்தா அணியில் அவருடன் இணைந்து பணியாற்றியவருமான அபிஷேக் நாயர் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதே வேளையில் தீலிப் இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக தொடர்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.