விளையாட்டு

வங்கதேசத்தை தெறிக்கவிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் - 7 பவுலர்களும் விக்கெட் எடுத்து அசத்தல்

வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

வங்கதேசத்தை தெறிக்கவிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் - 7 பவுலர்களும் விக்கெட் எடுத்து அசத்தல்
இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. குவாலியரில் நடைபெற்ற முதல் போட்டியில், ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றிருந்தது.

இந்நிலையில், 2ஆவது டி20 போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில்தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன் (10), அபிஷேக் சர்மா (15) மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் (8) மூவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

இதனால், இந்திய அணி 5.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்தது. ஆனால், அதற்கு பிறகு இணைந்த நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் இருவரும் முதலில் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர்.

ஆனால், பிறகு போக போக அதிரடியாக ஆடி வங்கதேச பவுலர்கள் தெறிக்கவிட்டனர். நிதிஷ்குமார் ரெட்டி 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து ரிங்கு சிங், தனது பங்கிற்கு 26 பந்துகளில் அரைசதம் கடந்தார். இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 108 ரன்கள் (48 பந்துகள்) எடுத்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் நிதிஷ்குமார் ரெட்டி 34 பந்துகளில் [7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்] 74 ரன்களும், ரிங்கு சிங் 29 பந்துகளில் [5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 53 ரன்களும் எடுத்து வெளியேறினர். ஆனாலும், இந்திய அணி தனது அதிரடியை நிறுத்தவில்லை. ஹர்திக் பாண்டியா 19 பந்துகளில் 32 ரன்களும், ரியான் பராக் 6 பந்துகளில் 15 ரன்களும் எடுத்தனர்.

இந்திய பேட்ஸ்மேன்களின் தாறுமாறான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளையும், டஸ்கின் அஹமது, ஹசன் ஷாகிப், முஷ்டபிஷுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச வீரர்கள் எந்தவித போராட்டமும் இன்றி இந்திய வீரர்களிடம் சரணடைந்தனர். அதிகப்பட்சமாக தனது கடைசி டி20 தொடரில் விளையாடிவரும் மஹ்முதுல்லா 39 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.

தொடக்க ஆட்டக்காரர் ஹொசைன் எமோன் மற்றும் மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 16 ரன்கள் எடுத்தனர். 6 வீரர்கள் ஒற்றை இலக்கத்தையே தாண்டவில்லை. இதனால், இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில், 7 பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், ஏழு பேரும் விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பேட்டிங்கில் கலக்கிய நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மேலும், அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா, மயங்க் யாதவ், ரியான் பராக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதன்மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றதோடு தொடரையும் கைப்பற்றியுள்ளது. வங்கதேச அணி டி20 வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக அதிகப்பட்சமாக 166 ரன்களே எடுத்துள்ளது. அந்த மோசமான சாதனையை வங்கதேச தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு வருகிறது.