அயோத்திக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம்.. அறக்கட்டளை அதிரடி அறிவிப்பு
மகா கும்பமேளாவிற்கு வரும் பக்தர்கள் அயோத்திக்கு வருவதால் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவி வருகிறது. இதனால் அடுத்த 15 நாட்களுக்கு அயோத்திக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலகின் மிக பெரிய ஆன்மிக நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும். இந்த கும்பமேளா ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை சுமார் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்காக பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆயிரத்து 800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், இரண்டாயிரத்து 750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகின்றனர்.
இந்த வருடம் கும்பமேளாவிற்கு 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என்றும் இதனால் இரண்டு லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மகா கும்பமேளாவிற்கு இதுவரை 13 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்துள்ளனர். மகாகும்பமேளா தொடக்க நாளில் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவெல் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் நீராடினார்.
40 பேருடன் மகாகும்ப மேளாவில் கலந்து கொண்ட லாரன் பாவெல் அவர்களுடன் நிரஞ்சனி அகாராவின் மகா மண்டலேஷ்வர் சுவாமி கைலாஷ் ஆனந்த் மகராஜ் முகாமில் தங்கினார். இதையடுத்து, நேற்று (ஜன 27) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உட்பட பலர் திரிவேணி சங்கமத்தில் நீராடினார்கள். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையை ஒட்டி மகா கும்பமேளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தை அமாவாசையை முன்னிட்டு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பிரயாக்ராஜில் குவிந்து வருகிறார்கள். இன்றும், நாளையும் லட்சகணக்கான பக்தர்கள் புனித நீராட வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கும்ப மேளாவிற்கு வருகை தரும் பக்தர்கள் அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்வதால் கடந்த ஒருவாரமாக அயோத்தியில் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவி வருகிறது.
இதனால், அடுத்த 15 நாட்களுக்கு அயோத்திக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.
What's Your Reaction?