IND VS NZ: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்... தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் அசத்தல்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.

Oct 24, 2024 - 23:58
 0
IND VS NZ: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்... தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் அசத்தல்!
இந்தியா - நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டி முதல் நாள் முடிவு

சென்னை: இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்ற நிலையில், இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸில் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முன்னதாக இந்திய அணியில் கேஎல் ராகுல், முஹம்மது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். 

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் லாதம், கான்வே ஆகியோர் களமிறங்கினர். கான்வே நிதானமாக ஆட, லாதம் 15 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய வில் யங் (Will Young) 18 ரன்களில் பெவிலியன் திரும்ப, நியூசிலாந்து அணி 76 ரன்களில் 2 ரன்களை எடுத்து தடுமாறியது. மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கான்வே – ரச்சின் ரவீந்திரா இணை ஓரளவு தாக்குப்பிடிக்க, நியூசிலாந்து அணியின் ஸ்கோரும் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. ஆனாலும், நியூசிலாந்து அணி வீரர்களால் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை. முக்கியமாக தமிழக சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வினும் வாஷிங்டன் சுந்தரும் பந்துவீச்சில் மிரட்டினர்.

இறுதியாக நியூசிலாந்து அணி 79.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 23.1 ஓவர்கள் வீசி 59 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் ரவிச்சந்திர அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய வீரர் அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 188 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற புதிய சாதனைப் படைத்தார். 

இதனையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினர். இந்த இணை இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் அமைத்துக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் சவுத்தி பந்துவீச்சில் பவுல்ட் ஆனார். கேப்டன் ரோஹித் சர்மா டக் அவுட் ஆனதால், ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனையடுத்து களமிறங்கிய சுப்மான் கில் 10 ரன்களும், ஜெய்ஸ்வால் 6 ரன்களும் எடுத்திருந்த போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதன்படி இந்திய அணி 16 ரன்களில் ஒரு விக்கெட்டை இழந்து 243 ரன்கள் பின்தங்கியுள்ளது. நாளைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் முன்னிலை பெறுவார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow