“அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பும் மகாவிஷ்ணு பேச்சும் தவறே இல்லை..” பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்புக் கேட்டது தவறு இல்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் 20-ம் ஆண்டு தொடக்கநாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் கொடியேற்றி, கேப்டன் இல்லம் என்ற பெயர் பலகையும் திறந்து வைத்தார். மேலும் இலவச மருத்துவ முகாம், டிஜிட்டல் வாயிலாக கட்சியில் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் அவர் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, கேப்டன் விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள், அவருக்கு பத்மபூஷன் விருது கிடைத்தது, தேமுதிகவின் 20ம் ஆண்டு துவக்கவிழா, இது மூன்றையும் முப்பெரும் விழாவாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடவிருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கேப்டன் இல்லாத முதல் கட்சியின் துவக்கம் நாள் கொண்டாட்டம் இது என்பதை மனவேதனையோடு தெரிவிக்கிறேன். இன்று தலைமை கழகத்தில் கொடியேற்றி இலவச மருத்துவ சிகிச்சை முகாம் தொடங்கி இருக்கிறோம். அதுமட்டுமல்ல உறுப்பினர் சேர்க்கை முகமும் டிஜிட்டல் வாயிலாக துவங்க இருக்கிறோம். இதுவரை தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமை அலுவலகம் அழைக்கப்பட்ட நம்முடைய அலுவலகம், இன்று முதல் கேப்டன் ஆலயம் என்று அழைக்கப்படும்” என்றார்.
அன்னபூர்ணா விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “ஜிஎஸ்டி என்பது அனைத்து தொழில்களுக்கும், அதாவது சிறு தொழிலாக இருந்தாலும், பெரிய தொழிலாக இருந்தாலும் தேவையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஜிஎஸ்டி வந்த பிறகு அனைவருடைய வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அன்னபூர்ணா உரிமையாளர் யதார்த்தமாகவும் நகைச்சுவையாகும் தான் அந்த கேள்வியை கேட்டார். இதில் எந்த உள்நோக்கம் இருப்பதாகவோ அல்லது அவர்களை அவமதிக்கும் நோக்கில் பேசியதாகவோ எனக்குத் தெரியவில்லை.
அதேபோல அந்த நேரத்தில் நிதித்துறை அமைச்சரும் அதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஊடகங்கள் தான் அதனை பெரிதாக்கியது. இதனால் தானாக முன்வந்து நிதி அமைச்சரை சந்திக்க வேண்டும் என அனுமதி பெற்று, அதன் அடிப்படையில் தான் அந்த சந்திப்பு நடைபெற்றது. அதில் அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார் இவ்வளவுதான். அதை அவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அதேபோல், மகாவிஷ்ணு விவகாரம் பூதாகரமானதையும் பார்த்தேன். அதுவும் அவ்வளவு பெரிய விஷயம் கிடையாது. முதலில் அவரை அரசுப் பள்ளியில் யார் பேச அழைத்தார்கள் என்பது பற்றி தெரியவில்லை.
அதேபோல், மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதும் தவறுதான். இப்படியான வைரல் செய்திகளால் ஊடகங்களுக்கு தான் கொண்டாட்டம்” என்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். மேலும், விசிக தலைவர் திருமாவளவனின் டிவிட்டர் பதிவு குறித்து கருத்துத் தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், “அவர்கள் கூட்டணி, அவர்களின் நிலைப்பாடு” என முடித்துக்கொண்டார்.
What's Your Reaction?