ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவிற்கு முடிச்சிப்போட வேண்டாம் - ரகுபதி ஆவேசம்

Minister Armstrong on Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திமுகவை முடிச்சிப்போட்டு பார்க்க வேண்டாம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Jul 25, 2024 - 07:36
Jul 26, 2024 - 10:03
 0
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவிற்கு முடிச்சிப்போட வேண்டாம் - ரகுபதி ஆவேசம்
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் ஆம்ஸ்ட்ராங்

Minister Armstrong on Armstrong Murder Case : நாகை மாவட்டத்தில் உள்ள 53 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியை சேர்ந்த 5538 மாணவ மாணவிகளுக்கு 2 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நாகப்பட்டினம் நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு என்பதை உச்சரிப்பதை பாவம் என்று நினைக்கிறார். தமிழ்நாடு என்ற பெயரை சொல்வதையே அச்சப்படும் நிதியமைச்சர் திருக்குறளையும், பாரதியாரையும் மறந்துவிட்டார் என்று விமர்சித்தார்.

மோடியை தனி மெஜாரிட்டியில் வெற்றிபெற விடாமல் தடுத்தது இந்தியா கூட்டணி என்று கூறிய அமைச்சர், ஒன்றிய அரசின் நிதி கிடைக்கவில்லை என்றாலும் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாடு முதல்வர் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, செயல்பட்டு வருகிறார்” என்றார். பீஹார், ஆந்திரா இல்லையென்றால் மோடி இல்லை என்று கூறிய அமைச்சர் ரகுபதி, அதற்காக அவர்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார்.

பின்னர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து கூறிய அமைச்சர் ரகுபதி, “சென்னையில் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன்பு கொண்டு வந்துள்ளோம். தொடர்ந்து குற்றவாளிகள் கைது செயப்பட்டு வருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவை முடிச்சிப்போட்டு பார்க்க வேண்டாம்” என எச்சரித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், வழக்கறிஞர் அருள், பெண் ரவுடி அஞ்சலை, வழக்கறிஞர் மலர்கொடி, ஹரிஹரன் என மொத்தம் 16 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதோடு, இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர். அதேபோல், பிரபல ரவுடி சம்போ செந்திலை (Sambo Senthil) போலீசார் தேடி வருகின்றனர். தவிர, ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கை மீண்டும் காவல் துறையினர் கையில் எடுத்து, ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சந்தேகிக்கும்படியான ரவுடிகளை கண்காணித்தும் வருகின்றனர்.

முக்கியமாக இந்த படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் என்பவர்தான் மூளையாக செயல்பட்டதும், இவர் திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய திமுக வழக்கறிஞர் பிரிவில் இருந்து வருவதும் தெரியவந்துள்ளது. அதேபோல, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷின் தந்தை திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணியின் துணை அமைப்பாளராக பொறுப்பில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் திமுகவிற்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், இந்த வழக்கில் கட்சிகள் பாரபட்சமின்றி அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதே உண்மை. இந்நிலையில் தான், ரகுபதி திமுகவை முடிச்சிப்போட்டு பார்க்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow