அரசியல்

'அந்த வீடியோவை அட்மின் போட்டிருப்பார்; எனக்கு தெரியாது’.. திருமாவளவன் விளக்கம்!

''ஆட்சியிலும் பங்கு ,அதிகாரத்திலும் பங்கு. கடைசி மக்களுக்கு ஜனநாயகம். எளிய மக்களுக்கு அதிகாரம் இதையெல்லாம் சொல்கின்ற கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்திய இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி’’ என்று திருமாவளவன் கூறியிருந்தார்.

'அந்த வீடியோவை அட்மின் போட்டிருப்பார்; எனக்கு தெரியாது’.. திருமாவளவன் விளக்கம்!
Thirumavalavan Explanation

சென்னை: தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டி இந்த கூட்டணி நீடிக்குமா? என்ற சந்தேகங்களை எழுப்பியது. அதாவது அக்டோபர் 2ம் தேதி விசிகவின் சார்பில் கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் பாஜக, பாமக தவிர அனைத்து கட்சிகளும் பங்கேற்கலாம்; அதிமுகவும் பங்கேற்கலாம் என்று திருமாவளவன் கூறியிருந்தார். 

வேங்கைவயல், ஆம்ஸ்ட்ராங் படுகொலை உள்ளிட்ட விஷயங்களில் திமுக அரசிடம் மென்மையான போக்கை கடைபிடித்த திருமாவளவன், திடீரென திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கியது. இதனால் திமுக கூட்டணியில் இருந்து விசிக பிரிய உள்ளதாக தகவல்கள் பரவின. இதற்காகவே காத்திருந்த அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் சமூகவலைத்தளங்கள் மூலம் இந்த விஷயத்தை பெரிதாக்கி பேச வைத்தனர்.

இதனால்  ’’திருமாவளவனின் மது ஒழிப்பு  மாநாடு திமுகவுக்கு எதிரானது அல்ல; அவர் அதிமுகவை அழைத்ததிலும் எந்த உள்நோக்கமும் கிடையாது. மது ஒழிப்பு மாநாட்டுக்கும், 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்று திமுகவின் அமைச்சர்கள் தெரிவித்தனர். இந்த கருத்தையே திருமாவளவனும் வெளிப்படுத்தினார். இன்று காலை அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலினும், திருமாவளவன் அளித்த விளக்கத்தை சுட்டிக்காட்டினார்.

முதல்வர் விளக்கத்தின் மூலம் இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது என திமுகவினர், விசிகவினர் நிம்மதியாக இருந்த நிலையில், மீண்டும் இந்த விவகாரத்துக்கு உயிர் கொடுத்தார் திருமாவளவன். அதாவது தனது ’எக்ஸ்’ தளத்தில் தான் பேசிய பழைய வீடியோ ஒன்றை திருமாவளவன் பகிர்ந்தார். '’ஆட்சியிலும் பங்கு ,அதிகாரத்திலும் பங்கு. கடைசி மக்களுக்கு ஜனநாயகம். எளிய மக்களுக்கு அதிகாரம் இதையெல்லாம் சொல்கின்ற கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்திய இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி’’ என்று திருமாவளவன் பேசுவது போல் அமைந்த அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானது. 

இந்த வீடியோ மூலம் திருமாவளவன் திமுகவை தாக்குவதாக நெட்டிசன்கள், அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்தனர். இதனால் அந்த வீடியோவை திருமாவளவன், டெலிட் செய்தார். ஆனால் அதன்பிறகு மீண்டும் அந்த வீடியோவை பதிவேற்றம் செய்த அவர் 2வது முறையாக அதை டெலிட் செய்தார். பழைய வீடியோவை பகிர்ந்தது மூலம் திமுக மீதான விசிகவின் மனக்கசப்பு வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்று பல்வேறு தரப்பினரும் கருத்துகளை கூறி வருகின்றனர். 

இதனைத் தொடர்ந்து திருமாவளவன் வீடியோ குறித்து விளக்கம் அளித்த விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, ‘’திருமாவளவன் வீடியோ பகிர்ந்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. அவரின் பேச்சு அரசியல் நிலைப்பாட்டு மட்டுமே’’ என்று கூறியுள்ளார்.  இந்நிலையில், அந்த வீடியோ குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த திருமாவளவன், ‘’சமூக வலைத்தளத்தில் அந்த வீடியோவை அட்மின் வெளியிட்டுருக்கலாம். அதுபற்றி எனக்கு ஏதும் தெரியாது. ஆனால் ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு என்பது விசிகவின் நீண்டகால நிலைப்பாடாக உள்ளது’’என்று தெரிவித்துள்ளார்.