தமிழ்நாடு

வகுப்பில் அதிகம் பேசிய பள்ளி மாணவர்கள்.. வாயில் டேப் ஒட்டிய ஆசிரியர்

ஒரு மாணவி உள்பட 5 மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டி கொடுமைப்படுத்தியதாக அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வகுப்பில் அதிகம் பேசிய பள்ளி மாணவர்கள்.. வாயில் டேப் ஒட்டிய ஆசிரியர்
மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டி கொடுமைப்படுத்தியதாக தலைமை ஆசிரியர் மீது புகார்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில், அதே பகுதியை சேர்ந்த கனிஷ் வர்மா. நிதிஷ், கவின், ரோஷன், சஷ்மிதா ஆகியோர் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த பள்ளி தலைமை ஆசிரியர் புனிதா ஒரு மாணவி உட்பட 5 மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டி இரண்டு மணி நேரமாக வகுப்பறையில் உட்கார வைத்து உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

அதே பள்ளியில் பணியாற்றி வரும் மூன்றாம் வகுப்பு ஆசிரியை மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டப்பட்டு இருந்ததை செல்போனில் புகைப்படம் எடுத்து அவற்றை மாணவர்களின் பெற்றோர் செல்போனுக்கு தற்போது அனுப்பி உள்ளார்.

புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றார்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று கேட்டு உள்ளனர். அதற்கு, உங்கள் பிள்ளைகள் வகுப்பறையில் பேசிக் கொண்டு இருந்ததால் செல்லோ டேப் ஒட்டியதாக தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் புகைப்பட ஆதாரத்துடன். தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த புகார் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் புனிதாவிடம் விளக்கம் கேட்க அவரது செல்போன் எண்ணிற்கு பல முறை தொடர்பு கொண்டும் நமது செல்போன் அழைப்பை துண்டித்தார்.