UGC NET 2024: ஜனவரி 15 நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைப்பு.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
பொங்கல் அன்று நடத்தப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வை மாற்றக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வில் (UGC-NET) தேர்ச்சி பெறுவதன் மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த தேர்வானது ஆண்டில் இருமுறை நடத்தப்படுகிறது.
அதன்படி, 30 பாடங்களுக்கான பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வு ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 16-ஆம் தேதி வரை நடைபெறும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. மேலும், டிசம்பர் 11-ஆம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
மேலும் படிக்க: 2026-ல் நல்லாட்சி லட்சியம் நிறைவேற பொங்கட்டும் வெற்றிப் பொங்கல்- விஜய்
தமிழகத்தில் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல், ஜனவரி 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினம், ஜனவரி 16-ஆம் தேதி உழவர் திருநாள் எனத் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள் என்பதால் அந்த தினங்களில் நடத்த திட்டமிட்டிருந்த பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வை மாற்றக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதினர்.
மேலும் படிக்க: இனி ஜெயம் ரவி என்று அழைக்காதீர்கள்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகர்
இந்நிலையில் பொங்கல் (15.01.2025) அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதற்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மற்ற தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்விற்கான அட்மிட் கார்டு ஏற்கனவே வெளியான நிலையில், தேசிய தேர்வு முகமை (NTA) https://ugcnet.nta.ac.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. ஜனவரி 15-ஆம் தேதி சமஸ்கிருதம், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல், சட்டம், மலையாளர், உருது, சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட 17 பாடங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வு நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?