2026-ல் நல்லாட்சி லட்சியம் நிறைவேற பொங்கட்டும் வெற்றிப் பொங்கல்- விஜய்
பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய் ‘நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025-ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சூரியனை வணங்கும் விதமாக அதிகாலையில் மக்கள் பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து வணங்கினர். பொங்கல் திருநாளையொட்டி கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த 11-ம் தேதி முதலே பலரும் சொந்த ஊருக்கு பயணிக்க தொடங்கினர்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயங்கின. இந்த நிலையங்களை இணைக்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளும் இயக்கப்பட்டன. இருந்தாலும், பொதுமக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இல்லாமல் தவித்ததாக கூறப்படுகிறது. பொங்கலையொட்டி சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் சென்னை வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் படிக்க: போகி பண்டிகை: குப்பைகளை எரிப்பதற்கு பதிலாக வாகனங்களை கொளுத்திய சிறுவர்களால் பரபரப்பு
பொங்கல் திருநாளையொட்டி பல கட்சி தலைவர்களுக்கும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், பொங்கல் திருநாள்! உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.
2026-இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025-ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல்.
பொங்கலோ பொங்கல்! இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம். அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
What's Your Reaction?