WI vs SA T20i Series : 20 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகள் காலி.. மீண்டும் சொதப்பிய தெ.ஆப்பிரிக்கா... வெ.இண்டீஸ் சாதனை
WI vs SA T20i Series Match Highlights : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதுடன் தொடரையும் இழந்தது.

WI vs SA T20i Series Match Highlights : வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் 22 பந்துகளில் 41 ரன்களும், ரோமன் பொவெல் 22 பந்துகளில் 35 ரன்களும், ஷெர்ஃபன் ரூதர்ஃபோர்ட் 18 பந்துகளில் 29 ரன்களும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் 13 சிக்ஸர்கள் விளாசப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் லிஷார்ட் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளையும், பேட்ரிக் க்ருகர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, 149 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி அளித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரியான் ரிக்கெல்டன் மற்றும் ரீஷா ஹெண்ட்ரிக்ஸ் இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்தனர். பின்னர், ரியான் ரிக்கெல்டன் 20 ரன்களிலும், ரீஷா ஹெண்ட்ரிக்ஸ் 44 ரன்களிலும் வெளியேறினர்.
இதனையடுத்து களமிறங்கிய எய்டன் மார்க்ரம் (19), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (28), ராஸீ வாண்டர் டசன் (14) என அடுத்தடுத்து, சீரான இடைவெளியில் வெளியேறினர். ஒரு கட்டத்தில் 13 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 125 ரன்களை தென் ஆப்பிரிக்கா அணி எடுத்திருந்தது. ஆனால், அடுத்த 36 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்து, மீதமுள்ள 7 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் மற்றும் ரொமாரியோ ஷெபெர்ட் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால், தென் ஆப்பிரிக்கா அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஆட்டநாயகன் விருது, 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரொமாரியோ ஷெபெர்ட்-க்கு வழங்கப்பட்டது. 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. மேலும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து 3 டி20 தொடர்களை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பைற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






