Actress Revathy Sampath on Actor Riyaz Khan : திரைத்துறையில் கடந்த சில நாட்களாகவே பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா ஷூட்டிங்கின்போது நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் பாலியல் சீண்டல்கள் குறித்தும் நடிகைகள் குமுறி வருகின்றனர். அதுவும் திரைத்துறையில் ஆண் ஆதிக்கம் தலை விரித்து ஆடுவதாகவும் புகார்களை அடுக்கி வைக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக மலையாள சினிமாவில் பாலியல் சீண்டல்கள் உச்சத்தில் இருப்பதாக நடிகைகள் பலர் தொடர்ந்து புகாரளித்து வருகின்றனர். மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. மலையாள சினிமாவில் பெண் கலைஞர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியில் பழம்பெரும் நடிகை சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வல்சலா ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த கமிட்டி பல நடிகைகளிடம் விசாரணை நடத்தி கடந்த 2019ம் ஆண்டு அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இத்தனை ஆண்டுகளாக வெளியாகாத இந்த அறிக்கைகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், ரேவதி சம்பத் என்ற நடிகை, நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தார். அதில், “நான் 12ம் வகுப்பு படித்து முடித்திருந்த நேரத்தில் நடிகர் சித்திக் சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி என்னை அணுகி என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்” என தெரிவித்திருந்தார். இந்த புகாரையடுத்து நடிகர் சித்திக் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பிரபல நடிகர் ரியாஸ் கான் மீதும் பாலியல் புகார் கொடுத்துள்ளார் நடிகை ரேவதி சம்பத். கேமரா மேன் ஒருவரிடமிருந்து தனது மொபைல் நம்பரை வாங்கிய ரியாஸ் கான், தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் ஆபாசமாகப் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ரேவதி சம்பத்தின் தோழிகளை தனக்கு அறிமுகம் செய்யும்படியும் ரியாஸ் கான் கேட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். இது சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரியாஸ் கான் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் ஆவார். தமிழில் வின்னர், பத்ரி உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கான ரசிகர்களை சம்பாதித்தார். இதுமட்டும் இல்லாமல் அண்மையில் இவரது மூத்த மகன் ஷாரிக் ஹாசனின் திருமணம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இப்படியான சூழலில் ரியாஸ் கான் மீது பாலியல் புகார் எழுந்துள்ளதால் அவரது குடும்பமே ஸ்தம்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.