கவுன்சிலர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளிவரும்.. பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பேட்டி
ஈரோடு மாநகராட்சியில் உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சார்பில் வீரப்பன்சத்திரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மாநகராட்சி பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும், கழிவுநீர் கால்வாய்களை சரிசெய்ய வேண்டும், மிக அதிகளவில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கஞ்சா விற்பனையில் இந்தியாவின் தலைநகரமாக தமிழகம் மாறியிருப்பதாக கூறி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், ஈரோடு மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரியை கட்டுவதற்கு , மக்கள் அவர்களுடைய சொத்துக்களை விற்பனை செய்து தான் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதேபோல மதுரை மாநகராட்சியில் ஆடு, மாடு மற்றும் செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பதற்கும் வரி வசூல் செய்து வருவதால், தமிழகத்தில் ஒரு புரட்சி வெடிக்கப்போவதாக தெரிவித்தார்.
மேலும் ஈரோடு மாநகராட்சிக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டத்தை அறிவித்த உடனேயே நேற்று முன்தினம் மாநகராட்சியில் உயர்த்த மாட்டோம் என்ற கண்துடைப்பு தீர்மானம் நிறைவறே்றியிருப்பதை நாங்கள் நம்ப தயாராக இல்லை என்றும் அதற்காக தான் இன்று எங்களை சொத்துக்களை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்ற நூதன முறையிலான ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளதாகவும் கூறிய அவர், ஈரோடு மாநகராட்சியில் உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களின் ஊழல் பட்டியல் தயார் செய்து வருவதாகவும், அதனை விரைவில் வெளியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
What's Your Reaction?






