தமிழகத்தில் நிலவும் கடும் பனிமூட்டம்.. சிரமத்திற்குள்ளான பொதுமக்கள்
தமிழகத்தில் நிலவும் அதிகப்படியான பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும், விமானங்கள் வருகைப்பாடு, புறப்பாடு தாமதமாகியுள்ளது.
![தமிழகத்தில் நிலவும் கடும் பனிமூட்டம்.. சிரமத்திற்குள்ளான பொதுமக்கள்](https://kumudamnews.com/uploads/images/202502/image_870x_67a581a044d18.jpg)
தமிழக பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியதன் எதிரொலியாக, சென்னையில் பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது.
சென்னையின் மைய பகுதிகளான எழும்பூர், பிராட்வே, கிண்டி, நுங்கம்பாக்கம் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அதேபோல் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் காமராஜர் சாலைகளில் பனிப்பொழிவு காணப்படுகிறது. காலை 8 மணி அளவிலும் பனிப்பொழிவு நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சாலையில் சென்றனர்.
சென்னை மட்டுமல்லாமல் கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இன்று காலை பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது.
குறிப்பாக அவிநாசி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் நிலவிய பனி மூட்டம் காரணமாக குளிர்ச்சியான இதமான சூழல் நிலவியது. இதேபோல் புறநகர் பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவியது. சூலூர், சோமனூர், கருமத்தம்பட்டி, கணியூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.
விமானங்கள் வருகைப்பாடு-புறப்பாடு தாமதம்
சென்னை விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். இந்த நிலையில் மும்பையில் இருந்து வந்த ஆகாச ஏர் விமானம், சென்னை விமான நிலையத்தில் நிலவிய அதிக்கப்படியான பனி மூட்டம் காரணமாக பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.
மேலும் கோலாலம்பூரில் இருந்து 6.35 மணிக்கு சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பனிப்பொழிவால் ஒரு மணி நேரம் தாமதமாக வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
சமீபத்தில், அதிகப்படியான பனி மூட்டத்தால் சென்னையில் தரையிறங்க வேண்டிய ஆறு விமானங்கள் பெங்களூர், திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், சென்னை விமான நிலையத்தில் 25-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கியுள்ளாகியுள்ளனர். மேலும், 148 பயணிகளுடன் சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாமல் தொடர்ந்து வானில் வட்டமடித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)