தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு அலுவலர் சங்கத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன், நேற்று முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை அளித்தோம். பழைய ஓய்வூதிய திட்டம், 15 நாள் ஈட்டிய விடுப்பு, காலி பணியிடம் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இன்றைய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என நம்பினோம். இம்மியளவும் கோரிக்கைகள் மீது முன்னேற்றம் இல்லை. முதலமைச்சர், நிதியமைச்சரின் பட்ஜெட்டும் ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 23ம் தேதி ஞாயிறு அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இதுவரை கண்டிராத வகையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது. சுமார் 6 லட்சம் அரசு ஊழியர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மார்ச் 30 ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் குழு, உயர்மட்டக் குழு கூட்டம் கூடி ஆலோசிப்போம். அதற்குள் இந்த கோரிக்கையை நிறைவேற்ற முன்வராவிட்டால், வேலை நிறுத்தப் போராட்டம் உள்ளிட்ட தொடர்போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். நிதி பற்றாக்குறை என்று சொல்வதை ஒரு போதும் ஏற்க முடியாது, கொடுக்க மனமில்லை, என்றார்.
தொடர்ந்து பேசிய ஒருங்கிணைப்பாளர் சேகர், சரண் விடுப்பு தடை ஆணை நீக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். இன்று பெரிய ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளது. டெட் தேர்வை ரத்து செய்து சாதாரண முறையை கொண்டு வர வேண்டும். தமிழக முதலமைச்சரை சில அதிகாரிகள் தவறாக பயன்படுத்துகிறார்கள். நீங்கள் அதிகாரிகள் பேச்சை கேட்காமல் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், என்றார்.