ஹரியானா தேர்தலில் வினேஷ் போகத் போட்டி… காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்!

ஹரியானா மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்மையில் காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. 

Sep 7, 2024 - 13:01
Sep 7, 2024 - 21:55
 0
ஹரியானா தேர்தலில் வினேஷ் போகத் போட்டி… காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்!
Vinesh Phogat

பாஜக ஆட்சி நடந்து வரும் ஹரியானா மாநிலத்தின் சட்டப்பேரவை  தேர்தல் அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜக அங்கு மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் தீவிரமாக உள்ள நிலையில், இம்முறை கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டு விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. இதனால் ஹரியானா மாநிலத்தின் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இரண்டு கட்சிகளும் வேட்பாளர்கள் தேர்வில் மிக கவனமாக செயல்பட்டு வருகின்றன. 

இதனை தொடர்ந்து, 31 வேட்பாளர்களை கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில், மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் காங்கிரஸ் சார்பில் ஜூலானா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் மீது வினேஷ் போகத் உட்பட மேலும் சில மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதோடு பிரிஜ் பூஷனுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நீண்டநாட்களாக போராட்டமும் நடத்தினார்கள். அப்போது வினேஷ் போகத் உள்ளிட்ட வீராங்கனைகள் தரதரவென இழுத்து செல்லப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வளவு நடந்தபிறகும், மத்திய பாஜக அரசு, பிரிஜ் பூஷனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன்பிறகு வினேஷ் போகத் காயத்தால் அவதிப்பட்டு குணமடைந்தார். கடும் போராட்டம், அவமானம், காயம் ஆகியவற்றை தாண்டி பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்கு பதக்க கனவுடன் சென்றார் வினேஷ் போகத். ஆனால், 50 கிலோ எடை பிரிவில் விளையாடிய வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததை காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இதுகுறித்து பேசியுள்ள வினேஷ் போகத், ''மல்யுத்தத்தின் போதும், பல்வேறு பிரச்னைகளின்போதும் எனக்கு ஆதரவாக இருந்த மக்களுக்கு நன்றி. டெல்லி சாலையில் நாங்கள் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டபோது, காங்கிரஸ் எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்தது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் காங்கிரசில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் மல்யுத்த போட்டிகளில் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டோமோ அதேபோல் நாட்டு மக்களுக்கு ஆதரவாகவும் எங்கள் குரல் ஒலிக்கும். 

குறிப்பாக பெண்களுக்கு ஆதரவாக எங்களின் குரல் பலமாக ஒலிக்கும். டெல்லியில் போராட்டம் நடத்தியபோதே நான் ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறி இருக்கலாம். ஆனால் நான் ஒலிம்பிக்கில் பைனல் வரை சென்றுவிட்டேன். ஆனால் இப்போது நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது'' என்றார். காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது வினேஷ் போகத் ஜூலானா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளார். பஜ்ரங் புனியா அகில இந்திய கிசான் காங்கிரஸ் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow