விளையாட்டு

சச்சினின் சாதனையை முறியடித்த 19 வயது இளைஞர்.. துலீப் டிராபியில் அசத்தல்

துலீப் டிராபி அறிமுகப் போட்டியில், 19 வயதான முஷீர் கான் 181 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

சச்சினின் சாதனையை முறியடித்த 19 வயது இளைஞர்.. துலீப் டிராபியில் அசத்தல்
முஷீர் கான் மற்றும் சச்சின் டெண்டுல்கர்

துலீப் டிராப் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா ‘ஏ’ மற்றும் இந்தியா ‘பி’ அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ பந்துவீச்சை தேர்வுசெய்தது.

இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்தியா ‘பி’ அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மோசமான தொடக்கத்தை அளித்தது. அபிமன்யூ ஈஸ்வரன் (13), யாஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் (30), சர்ஃப்ராஸ் கான் (9), ரிஷப் பண்ட் (7), நிதிஷ்குமார் ரெட்டி (0), வாஷிங்டன் சுந்தர் (0), சாய் கிஷோர் (1), என சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இதனால், இந்தியா ‘பி’ அணி 94 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், நங்கூரம் போல் நிலைத்து நின்ற அறிமுக வீரர் முஷீர் கான் சதம் விளாசினார். அவருக்கு உறுதுணையாக நின்ற, நவ்தீப் சைனி சிறப்பாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தார்.

முஷீர் கான் 181 ரன்கள் அடித்திருந்த நிலையில், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வெளியேறினார். இருவரும் இணைந்து 8ஆவது விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தனர். துலீப் டிராபி வரலாற்றில், 8ஆவது விக்கெட்டுக்கு அடிக்கப்பட்ட அதிகப்பட்ச ரன் இது என்பது குறிப்பிடத்தக்கது. நவதீப் சைனி 56 ரன்களில் வெளியேற இந்தியா ‘பி’ அணி தனது முதல் இன்னிங்ஸில் 321 ரன்களில் முடிவுக்கு வந்தது.

இந்த போட்டியில், மூஷீர் கான் 181 ரன்கள் எடுத்ததன் மூலம், துலீப் டிராபியில், அறிமுகப் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினின் சாதனையை முறியடித்தார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர் தனது அறிமுகப் போட்டியில், 159 ரன்கள் எடுத்திருந்தார்.

துலீப் டிராபி அறிமுக போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள்:

1. பாபா அபராஜித் (212)
2. யாஷ் துல் (193
3. முஷீர் கான் (181)
4. சச்சின் டெண்டுல்கர் (159)

முன்னதாக 2023/2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் 7 போட்டிகளில் 360 ரன்கள் அடித்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 2ஆம் இடத்தை பிடித்திருந்தார். அதேபோல, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியில் 203 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.