தமிழ்நாடு

சிலிண்டர் புக் செய்ய கால் பண்ணாலும் இந்தி மொழியா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

இந்தியில் மட்டுமே வாடிக்கையாளர் சேவையா? எரிவாயு நிறுவனங்களின் நவீன இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது என மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சிலிண்டர் புக் செய்ய கால் பண்ணாலும் இந்தி மொழியா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்
gas cylinder booking customer support

மும்மொழிக்கொள்கை விவகாரம் தமிழக அரசியல் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெரும் விவாதங்களை கிளப்பி வருகிறது. நாடாளுமன்றத்தில் PM SHRI பள்ளி விவகாரத்திற்கு அடித்தளமிட்ட மும்மொழிக் கொள்கை விவகாரம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வீட்டிற்குத் தேவையான சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய கால் செய்தால் இந்தி மொழியில் பதிலளிக்கப்படுவதற்கு பாமக தலைவர் அன்புமணி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் தனது X சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் பின்வருமாறு-

இந்தியில் மட்டும் தான் பதிலா?

”தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு  இண்டேன், பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் ஆகியவற்றின்  வாடிக்கையாளர் சேவை மையத்திற்கான இலவச தொலைபேசி அழைப்பில் (1800 2333 555) தொடர்பு கொண்டு பேசும் போதெல்லாம் இந்தியில் மட்டுமே பதிலளிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இதுவும் ஒரு நவீன இந்தித் திணிப்பு தான். இதை அனுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டில் வணிகம் செய்யும் இந்த நிறுவனங்கள் தமிழ் மொழியில் சேவை வழங்க வேண்டும். இலவச தொலைபேசி அழைப்பைத் தொடர்பு கொள்பவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பதில் அளிக்கும் வாய்ப்பு இருக்கும் போதிலும் கூட,  இந்தியில் மட்டும் தான் பதில் அளிக்கப்படுகிறது. தமிழில் உரையாட வேண்டும் என்று தெரிவித்தால் மீண்டும் தொடர்பு கொள்வதாகக் கூறி அழைப்பு துண்டிக்கப்படுகிறது.  இதைத் திட்டமிட்ட இந்தித் திணிப்பாகவே பார்க்க வேண்டும்.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் பதிலளிக்க மறுப்பதை எண்ணெய் நிறுவனங்கள் நியாயப்படுத்த முடியாது. தமிழில் சேவை வழங்காமல் இந்தியில் மட்டுமே  சேவை வழங்குவதற்காக எரிவாயு  நிறுவனங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவித்தாக வேண்டும். இந்தித் திணிப்பைக் கைவிட்டு, தமிழ், ஆங்கிலம் மற்றும் அனைத்து மாநில மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுவதை  மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

ஒருபுறம் மும்மொழி கொள்கை விவகாரம் பற்றி எரியும் நிலையில், அதற்கு இன்னும் வலுசேர்க்கும் வகையில் இந்த விவகாரம் அமைந்துள்ளது என்றால் மிகையல்ல.