புதிய கட்சி தொடங்கியவர்கள் திமுக அழிய வேண்டும் என நினைக்கிறார்கள் - விஜய்க்கு முதலமைச்சர் பதில்
வசவாளர்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, எங்கள் பணி மக்களுக்கானது. எல்லோருக்கும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
புதியதாக கட்சி தொடங்கியவர்கள் கூட திமுக அழிய வேண்டும் என நினைக்கிறார்கள் என தவெக தலைவர் விஜய்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் மிக பிரமாண்ட முறையில் அக்.27ம் தேதி நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கை மற்றும் கொள்கைத் தலைவர்கள் குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். மேலும் ஆளும் திமுக அரசை கடுமையாக சாடி பேசினார். திராவிட மாடல் அரசு மக்களை ஏமாற்றும் அரசாக உள்ளதாக குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், சென்னை கொளத்தூரில் உள்ள அனிதா அகாடமி மூலம் tally பயிற்சி முடித்த 107 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழுடன் மடிக்கணினி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். மேலும் 350 பெண்களுக்கு தையல் இயந்திரம், 2,493 பேருக்கு மூக்கு கண்ணாடி புத்தாடை வழங்கப்பட்டது. மேலும், கலைஞர் இலவச கண் மையத்தில் சிகிச்சை பெற்றவர்களுக்கு மூக்கு கண்ணாடிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”எவ்வளவு நெருக்கடியான வேலைகள் இருந்தாலும், கொளத்தூருக்கு வந்தால் தனி மகிழ்ச்சி தான். அதேபோல் அனிதா அகாடாமிக்கு வந்தால் தனி உற்சாகம் வந்துவிடும். நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் குரலுக்கு ஒன்றிய அரசு ஒருநாள் நிச்சயம் பணியும். மேலும் நீட் தேர்வால் அனிதாவின் கனவை சிதைத்து விட்டது, உயிரை பறித்து விட்டது. நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் ஒருபுறம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எளியோரின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் குரல் தொடரும். சாதாரண பின்புலத்தில் இருந்து வருவோர் சாதிக்கும் வாய்ப்பை அனிதா அகாடமி உருவாக்கியுள்ளது.அனிதா அகாடமியில் பயிற்சிக்கு வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அனிதாவின் நினைவாக மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக அவரது பெயரில் அகாடமி உருவாக்கினோம். முதல்வர் படைப்பகத்தை மாணவர்கள் பயன்படுத்தி லட்சியங்களை அடைய வேண்டும். அனிதா அச்சீவர்ஸ் அகாடமி போல் அச்சீவ் செய்யும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது.
தமிழக மாணவர்களுக்காக ஒவ்வொரு திட்டமாக அரசு பார்த்து பார்த்து செய்து வருகிறது. எல்லா வகையிலும் தமிழக மாணவர்களை உயர்த்த வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. திராவிட மாடல் அரசின் செயலால் தொழில்முனைவோர் ஆர்வமுடன் வருகிறார்கள். ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என சிலர் குறை சொல்கிறார்கள். எந்த கட்சியாக இருந்தாலும், குறை மட்டுமே சொல்கிறார்கள், எதையும் பார்ப்பதில்லை. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டோம். திட்டங்களை முறையாக கண்காணித்து நிறைவேற்றுகிறோம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி சொல்லுகிறோம்.
புதுசு புதுசாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என நினைக்கிறார்கள். வாழ்க வசவாளர்கள் என அண்ணா கூறியதை நினைவில் வைத்து செயல்படுகிறோம். திமுக வளர்வது சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர்கள் எதிர்க்கின்றனர். வசவாளர்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, எங்கள் பணி மக்களுக்கானது. எல்லோருக்கும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மூன்றரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
What's Your Reaction?