'மகா விஷ்ணுவை ஒரு பயங்கரவாதி போல கைது செய்தது ஏன்?'.. சீமான் கேள்வி!

''அரச நிர்வாகத்தில் எத்தகைய தவறு நிகழ்ந்தாலும் அரசும், தொடர்புடைய அமைச்சகமும் தங்களைத் தற்காத்துக்கொள்ள முனையாமல் தவறுக்கான முழுப்பொறுப்பையும் ஏற்று, மக்களிடம் மன்னிப்புக்கோருவதோடு, இனி அத்தவறுகள் நிகழாது என உறுதியளித்து அதன்படி செயல்படுவதுதானே ஒரு நல்ல அரசின் நேர்மையான நிர்வாக நடைமுறையாக இருக்க முடியும்?'' என்று சீமான் கூறியுள்ளார்.

Sep 7, 2024 - 22:02
 0
'மகா விஷ்ணுவை ஒரு பயங்கரவாதி போல கைது செய்தது ஏன்?'.. சீமான் கேள்வி!
Seeman And Maha Vishnu

சென்னை: சென்னையில் உள்ள அரசுப் பள்ளியில் மகா விஷ்ணு என்ற நபர் ஆன்மிகச் சொற்பொழிவு நடத்தியுள்ளார். மேலும் பாவம், புண்ணியம், மறுஜென்மம் போன்ற மூடநம்பிக்கை தொடர்பான கருத்தை மாணவர்களிடம் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளி ஆசிரியரிடமும் அவர் மிக கடுமையாக நடந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகின.

அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில்,  ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகா விஷ்ணுவை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகத்துக்கு தெரியாமல் இந்த நடைபெற்றதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், ''சென்னை சைதாப்பேட்டை மற்றும்  அசோக்நகர் அரசுப்பள்ளிகளில் மாணவ - மாணவியருக்காக நடத்தப்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவிற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களை மட்டும் பணியிடமாற்றம் செய்து திமுக அரசு தண்டித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

குறிப்பிட்ட பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவானது கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல், அவர்கள் அனுமதியின்றி நடைபெற்றதா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சகத்துக்கு தெரியாமல் நடைபெற்றதா? அப்படி தெரியாமல் நடைபெறுகிறது என்றால் அதைவிட மோசமான நிர்வாகச் செயல்பாடு என்னவாக இருக்க முடியும்? அந்த அளவிற்கு அரசு வலிமையற்றதாக இருக்கிறதா?

ஒருவேளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின், அமைச்சகத்தின் அனுமதியோடுதான் நடைபெற்றதென்றால் அவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுப்பது? யார் தண்டனை கொடுப்பது? ஏற்கனவே, பள்ளிக்கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்வுகள் அரங்கேறி கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதிலிருந்து அரசு பாடம் கற்கவில்லையா? பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து அலட்சியமாகச் செயல்படுவது ஏன்?

அறிவுக்கருவறையில் நம்மைச் சுமக்கின்ற தாயாகத் திகழும் ஆசிரியப்பெருமக்களைப்  பார்க்கும்போது வணங்குவது, மனதில் வைத்து போற்றுவதுதான் தமிழர் மரபு. அதைவிடுத்து ஆசிரியர் தினமன்று, ஆசிரியர் கால்களை மாணவ- மாணவியர் கழுவி, அதற்கு பூசைகள் செய்வது என்ன மாதிரியான நடைமுறை? இதெல்லாம் யாருடைய பண்பாடு? இப்புதிய பழக்கங்களை வலிந்து திணிப்பது யார்?  தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இவ்வாறு நடைபெறுவதை பள்ளிக்கல்வித்துறை எப்படி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது? 

அத்தனையையும் அனுமதித்துவிட்டு, வெளியே தெரிந்து விமர்சனங்கள் எழுந்தவுடன் அரசும், அமைச்சகமும் தப்பித்துக்கொள்ள ஒவ்வொரு முறையும் கடைநிலை அரசு ஊழியர்களைப் பலியாக்குவது ஏன்? கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள்  பலியாக்கப்பட்டனர். தற்போது பள்ளி தலைமையாசிரியர்கள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடைபெற்றுள்ள நிகழ்வுகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகத்துக்கு, அதிகாரிகளுக்குத் தெரியாமல் நடைபெற்றது என்பதை எப்படி நம்ப முடியும்? 

தலைமையாசிரியர்கள் மட்டும் தண்டிக்கப்படுவதை எவ்வாறு ஏற்க முடியும்? அரச நிர்வாகத்தில் எத்தகைய தவறு நிகழ்ந்தாலும் அரசும், தொடர்புடைய அமைச்சகமும் தங்களைத் தற்காத்துக்கொள்ள முனையாமல் தவறுக்கான முழுப்பொறுப்பையும் ஏற்று, மக்களிடம்  மன்னிப்புக்கோருவதோடு, இனி அத்தவறுகள் நிகழாது என உறுதியளித்து அதன்படி  செயல்படுவதுதானே ஒரு நல்ல அரசின் நேர்மையான நிர்வாக நடைமுறையாக இருக்க முடியும்? ஆகவே,  சென்னை அசோக்நகர் பள்ளியின் தலைமையாசிரியர் தமிழரசிக்கு வழங்கியுள்ள இடமாற்ற தண்டனையை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும்'' என சீமான் கூறியிருந்தார். 

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ''ஆன்மீகம் போதிக்க நிறைய மடங்கள், ஆசிரமங்கள் உள்ளன. அரசுப் பள்ளியில் ஆன்மீகம் போதிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? மகா விஷ்ணுவை ஒரு பயங்கரவாதிகள் போல விமான நிலையம் சென்று கைது செய்துள்ளனர். வேறு ஒரு செய்தியை மறைக்க இந்த விஷயத்தை பெரிதாக்கியுள்ளனர்'' என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow