இந்தியாவின் வளர்ச்சியை கிறிஸ்தவ மத போதகர்கள் அழிக்க முயன்றனர் - ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு
இந்தியாவின் வளர்ச்சியை ஆங்கிலேயர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகர்கள் திட்டமிட்டு அழிக்க முயன்றதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் கல்வி குழுமத்தின் 50வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்தியாவின் வளர்ச்சியையும் எழுச்சியையும் அழிப்பதற்கு ஆங்கிலேயர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகர்கள் முதலில் கல்வி முறையை அழிக்க முயன்றனர்.
பின்னர் இந்தியாவில் உள்ள இயற்கை வளங்கள், பழமையான புத்தகங்கள் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். அதோடு மட்டுமல்லாமல் இந்திய மக்களின் அடையாளத்தை அவர்கள் மாற்றி அமைத்தனர். ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அவர்கள் செய்ததை இங்கே செய்ய முயன்றனர். ஆனால் பலிக்கவில்லை.
இந்தியா விடுதலையான பிறகு இந்திய அரசு வலிமை குறைந்ததாக இருந்தது. இதன் காரணமாக இந்தியாவில் கல்வி முறை என்பது தரம் குறைந்தது. இந்தியாவின் முதல் பிரதமர் இந்தியா மதச்சார்பின்மை நாடு என்று தெரிவித்தார். ஆனால், இப்போது நாம் இருக்கும் மதசார்பின்மை என்பது அயல்நாட்டு மதசார்பின்மையை அடிப்படையாகக் கொண்டது. எல்லோரும் ஒன்றாகி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது.
ஆனால் சுதந்திரம் பெற்ற பிறகு பிரிவினைவாதம் தொடங்கியது. ஒரே பாரதம் என்பது வலுவிழந்தது. இந்த நாட்டின் அடையாளத்தை ஆங்கிலேயர்கள் ஆட்சியில் அழித்து கொண்டிருந்தனர். குறிப்பாக அவர்கள் கல்வி முறைய அழித்தனர். பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்றால் மதமாற்றம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்திய நிலையும் இந்தியாவில் இருந்தது.
தமிழகத்திலிருந்து 70 ஆயிரம் பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய பிறகு அது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தியாவின் மதிப்பு உலக நாடுகளிடையே இன்று உயர்ந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவின் பாஸ்போர்ட்டின் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. பொருளாதாரத்தில் இந்தியா தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்கிறது. விரைவில் வல்லரசாக இந்தியா மாறும் என்பதில் மாற்று கருத்து இல்லை” என்றார்.
What's Your Reaction?






