சென்னை: தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ரஜினிகாந்த், ''பள்ளி ஆசிரியருக்கு பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம். அதேபோல் திமுகவில் ஏராளமான பழைய மாணவர்கள் உள்ளனர். இந்த பழைய மாணவர்களை சமாளிப்பது மிகவும் கஷ்டம். ஆனால் ஸ்டாலின் அதை சரியாக செய்து கொண்டிருக்கிறார்.
துரைமுருகன்னு ஒருத்தர் இருக்கிறார். கலைஞர் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டினவரு. அவர் என்ன சொல்ல வருகிறார். ஒரு விஷயத்தில் பாராட்டுகிறாரா? இல்லை திட்டுகிறாரா? என்பது தெரியாது. ஆனால் ஸ்டாலின் சார் Hats off to You.'' என்று கூறியிருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக மூத்த அமைச்சர் துரைமுருகன் அதிருப்தி தெரிவிப்பதாகவும், இதை வைத்தே ரஜினி பேசியதாக தகவல் பரவியது.
ஆனால் நேற்று அதே மேடையிலேயே ரஜினிக்கு பதில் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ''ரஜினிகாந்துக்கு என்னை விட ஒரு வயது அதிகம். ரஜினி எனக்கு அறிவுரை கூறினார். அவரது அறிவுரையை நான் ஏற்றுக் கொண்டேன். அதை புரிந்து கொண்டேன். பயப்பட வேண்டாம். எதையும் நான் தவற விட மாட்டேன். எல்லாவற்றிலும் உஷாராக இருப்பேன் என்ற உறுதியை ரஜினிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன் வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், 'மூத்த அமைச்சர்களை சமாளிக்க முதல்வர் ஸ்டாலின் மிகவும் கஷ்டப்படுகிறார் என ரஜினி பேசியுள்ளாரே' என்று துரைமுருகனிடம் கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர் , ''அதே மாதிரிதான் மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு விழுந்து, தாடி வளர்த்து என வயதான பிறகும் தொடர்ந்து நடிப்பதால் இளைஞர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. சொல்வது எல்லோருக்கும் சுலபம்'' என்று கூறினார்.
அமைச்சர் துரைமுருகனின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களை கொந்தளிப்பு அடையச் செய்துள்ளது. ''ரஜினிகாந்த் மிகவும் எதார்த்தமாக நகைச்சுவையாக திமுக மேடையில் பேசினார். ஆனால் இது தெரியாமல் துரைமுருகன் அவரை கிண்டல் செய்துள்ளார். இது மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு அழகல்ல'' என்று ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
''ரஜினிக்கு வயதானாலும் அவர் நடித்த படங்கள் அனைத்தும் 100 கோடிக்கு மேல் வசூலித்து அனைத்து தரப்புக்கும் லாபத்தை கொடுத்து வருகிறது. மூத்த நடிகர்கள் இருந்தாலும், சினிமாவில் இளம் நடிகர்கள் பலர் இன்று கோலோச்சி வருகின்றனர். ஆனால் அரசியல் கட்சிகளில், குறிப்பாக திமுகவில் அப்படியா உள்ளது? துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களால்தான் திமுகவில் ஏராளமான அடிமட்ட தொண்டர்கள், இளைஞர்கள் புதிய பதவிக்கு வர முடியாமல் உள்ளனர்'' என்று அமைச்சர் துரைமுருகனுக்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அதே வேளையில் ''மூத்த நடிகர்கள் என்று துரைமுருகன் ரஜினியை மட்டும் கூறவில்லை; திமுக ஆதரவாளரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான நடிகர் கமல்ஹாசனையும் சேர்த்துதான் கூறியுள்ளார்'' என்று ஒருதரப்பினர் கூறி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக துரைமுருகன் ஆதரவாளர்களும், ரஜினி ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் கடும் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.