'விஜய்யுடன் கூட்டணி இல்லை'.. திடீரென பின்வாங்கிய சீமான்.. பரபரப்பு பேட்டி!

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திராவிட அரசியலை தூக்கிப்பிடித்திருக்க, சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் திராவிட அரசியலில் இருந்து விலகி, தமிழர், தமிழ்நாடு என தமிழர் நலன் சார்ந்த விஷயங்களை பேசும் கட்சியாக உள்ளது. இதேபோல் தவெக கட்சியின் பெயரிலும் திராவிடத்தை தவிர்த்த விஜய், தனது முதல் அறிக்கையிலேயே, தமிழர் நலன் காக்கப்பட வேண்டும், மதவாத அரசியலுக்கு எதிர்ப்பு, ஊழல் அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதை அழுத்தம்திருத்தமாக சொன்னார்.

Sep 1, 2024 - 21:05
Sep 2, 2024 - 10:09
 0
'விஜய்யுடன் கூட்டணி இல்லை'.. திடீரென பின்வாங்கிய சீமான்.. பரபரப்பு பேட்டி!
Seeman And Vijay

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கினார். கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்தார்.  தவெக கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் உள்ளது. அதேபோல், நடுவில் உள்ள மஞ்சள் நிற பகுதியில், வாகை மலரை இரண்டு போர் யானைகள் வணங்குவது போன்று கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த கொடி  fevicol லோகோ போன்று இருப்பதாகவும், கேரள அரசு போக்குரத்து கழகத்தின் லோகோ (KSRTC LOGO) போன்று உள்ளதாகவும், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னத்தை அப்படியே காப்பி, பேஸ்ட் செய்துள்ளதாகவும் பல்வேறு தரப்பினர் ட்ரோல் செய்து வந்தனர்.

இந்த ட்ரோல்கள் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் பல்வேறு அரசியல் தலைவர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி, திருமாவளவன், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோரும் வாழ்த்துகளை கூறி இருந்தனர். இதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திராவிட அரசியலை தூக்கிப்பிடித்திருக்க, சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் திராவிட அரசியலில் இருந்து விலகி, தமிழர், தமிழ்நாடு என தமிழர் நலன் சார்ந்த விஷயங்களை பேசும் கட்சியாக உள்ளது. இதேபோல் தவெக கட்சியின் பெயரிலும் திராவிடத்தை தவிர்த்த விஜய், தனது முதல் அறிக்கையிலேயே, தமிழர் நலன் காக்கப்பட வேண்டும், மதவாத அரசியலுக்கு எதிர்ப்பு, ஊழல் அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதை அழுத்தம்திருத்தமாக சொன்னார்.

மேலும் தவெக கொடியிலும் வாகை மலர், போர் யானைகள் என தமிழர்களின் வரலாற்றை பதியச் செய்தார் விஜய். ஒரே கொள்கையுடன் ஒத்துப் போவதால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யும், சீமானும் இணைவார்களா? என்ற கேள்வி எழுந்தது. சில நாட்களுக்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமானிடம், ''2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி சேருவீர்களா?'' என்று செய்தியாளர்கள் கேட்டனர். 

இதற்கு பதில் அளித்த சீமான், ''தம்பி விஜய் செப்டம்பர் மாதம் கட்சி பணிகளை ஆரம்பிக்கிறார். 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அவரது கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக அந்த நேரத்தில்தான் பார்க்க வேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து தம்பி விஜய் தான் முடிவெடுக்க வேண்டும். கூட்டணி குறித்து தேர்தலின்போது பார்ப்போம்'' என்று கூறியிருந்தார். இதனால் சீமான்-விஜய் கூட்டணி அமைப்பது உறுதி என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று சீமான் திடீரென பின்வாங்கியுள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் 2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி-தவெக கூட்டணி இருக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சீமான், ''2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்து விட்டேன். மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது'' என்று கூறியுள்ளார். விஜய்யுடன் கூட்டணி வைப்பதில் இருந்து சீமான் திடீரென பின்வாங்கியது ஏன்? என்பது குறித்து சமூகவலைத்தளங்களில் விவாதம் நடந்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow