200 தொகுதிகள் இலக்கு.. காங்கிரஸை கழற்றிவிடுகிறதா திமுக? தலைமையின் பலே திட்டம்!
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதியில் போட்டியிட்டு 200 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது மேடைக்கு மேடை திமுகவினரின் பேச்சாக இருக்கிறது. முதலமைச்சர் முதல் திமுக அமைச்சர்கள் வரை யார் பேட்டி கொடுத்தாலும் திமுக 200 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது உறுதிய சூளுரைத்து வருகின்றனர். அப்படியெனில் மீதமுள்ள 34 தொகுதிகளை தான் கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கப்போகிறதா? அல்லது கூட்டணி கட்சிகளை கழற்றிவிடப் போகிறதா? என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. கூட்டணிகட்சிகளுக்கு 61 தொகுதிகளை ஒதுக்கியது திமுக. இதிலும், 14 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கப்பட்டனர். இதனால் மொத்தம் 187 தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தியது சூரியன்.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 61 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள தொகுதிகள் மதிமுக, ஐயுஎம்எல், மமக, தவாக, சிபிஎம், சிபிஐ, விசிக, கொமதேக, மவிக, ஆதித்தமிழர் பேரவை, அகில இந்திய பார்வார்டு ப்ளாக் ஆகிய கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியிருந்தது திமுக.
ஆனால் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலின் மெயின் கான்செப்டாக, ”ஆட்சி, அதிகார பங்கு” என்ற கோரிக்கையே உள்ளது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், இதை வைத்தே தொகுதி பங்கீடு விவகாரத்தில் கரார் காட்டத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இதற்கெல்லாம் பிற கட்சிகள் அசைந்து கொடுக்கலாம், எங்களை அசைக்க முடியாது என இருந்து வருகிறது திமுக. அதாவது, வருகிற சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திராவிட மாடல் அரசு வெல்லும் என துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தார். அவர் கூறியதையே வரிசையாக மற்ற இடங்களிலும் மந்திரம் போல சொல்லிவருகின்றனர் ஆளும் அமைச்சர்கள்.
இவர்களுடைய இந்த பேச்சால், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுகள் மேலோங்கி இருக்கிறது. அதவாது மொத்தம் இருக்கும் தொகுதி 234 , அதில் 200 தொகுதிகளில் திமுகவே போட்டியிடும் என்றால், மீதம் இருக்கும் 34 தொகுதிகளை தான் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கமுடியும். இந்த 34 தொகுதிகளில் கூட்டணியில் பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்தான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது அமைச்சர் நேரு திருச்சியில் பேசிய விஷயம். கடந்த செப்டம்பர் 3ம் தேதி திருச்சியில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், “நாடாளுமன்ற தேர்தலில் இருந்த அமைப்பு, சட்டமன்ற தேர்தலில் வருமா என்று சொன்னால் நிச்சயமாக அதுபோல சுமூகமான சூழ்நிலை வராது என்பது எங்களுடைய கருத்து என பேசியிருந்தார் அமைச்சர் நேரு. இதனை மேற்கோள்காட்டி, அப்போ புரியல, இப்போ புரியுது என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறிவருகின்றனர்.
அமைச்சர் இப்படி சொல்வதற்கான காரணம் என்ன என காலத்தில் சிறிது பின்னோக்கி சென்று பார்க்கும் போது தான் ஒன்று புலப்பட்டது. கடந்த ஜூன் மாதம், சென்னையில் நடந்த காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “ திமுகவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால் தோழமை என்பது வேறு, சார்ந்திருத்தல் என்பது வேறு. எத்தனை நாட்களுக்கு நாம் சாதிருக்கப்போகிறோம்” என கட்சியினர் மத்தியில் பொடிவைத்து பேசியிருக்கிறார். இதனுடைய விளைவாக தான் அமைச்சர் நேரு அப்படி சொல்லியிருக்கலாம் என அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அதேபோல திமுகவுடன் தான் கூட்டணி என்று உறுதியாக கூறி வரும் திருமா, விசிகவுடன் திமுகவின் உறவு சுமூகமாக இருப்பதாகவும் பேசி வருகிறார். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை வலுவாக எழுப்பிய விசிகவின் துணை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் அக்கட்சியில் இருந்து விலகினார். திமுக கூட்டணியில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிகவுக்கும் இம்முறை 20 க்கும மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று விசிகவின் மற்றொரு துணை பொதுச்செயலாளரான வன்னியரசு கூறி இருக்கிறார். 34 தொகுதிகளை மட்டுமே திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திட்டமிட்டு இருக்கும் நிலையில் கொடுப்பதை வாங்கிக்கொண்டு கூட்டணி கட்சிகள் அமைதி காக்குமா? அல்லது 200-ல் தனித்து போட்டி என்ற திட்டத்தில் இருந்து திமுக தலைமை இறங்கி வருமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
What's Your Reaction?